ஹைதராபாத்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்திருந்த ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
ஜவான் படம் தென் இந்தியாவில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றாலும், வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. எனினும் தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் உலக அளவில் 1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
முன்னதாக ஜவான் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் 100, 200, 300, 400, 500 கோடி வசூலை மிக வேகமாக செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. கடந்த மூன்று வாரங்களாக பாக்ஸ் ஆபிஸில் நிலையான வசூலை பெற்று வந்த ஜவான் நேற்று மூன்றாவது வார இறுதி நாள் வசூலில் 66% சரிவை சந்தித்தது. சாக்னில்க் என்ற சினிமா வர்த்தக இணையதள அறிக்கையின் படி, ஜவான் திரைப்படம் 19வது நாள் பாக்ஸ் ஆபிஸில் 5 கோடி மட்டுமே வசூல் செய்யததாக தகவல் கூறப்பட்டு உள்ளது.