சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஜெயிலர் கடந்த 10ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அனிருத் இசையில் ஜெயிலர் படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பாகவே நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் வெளியான காவாலா பாடல் இளைஞர்களளை கவர்ந்தது. சூப்பர்ஸ்டாரின் படத்தில் தமன்னாவை முதன்மையாக கொண்டு முதல் சிங்கிள் பாடல் வெளியாவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் தமன்னா நடனத்துடன் வெளியான காவாலா பாடல் ஜெயிலர் படத்தின் ப்ரமோஷனுக்கு நல்ல ஆரம்பமாக அமைந்தது.
இதற்கு பின் வெளியான ஹுகும் பாடல் ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தினாலும், காவாலா பாடலில் தமன்னாவின் நடனத்துடன், ரஜினியின் சிக்னேச்சர் ஸ்டைல், ஜானி மாஸ்டரின் நடன வடிவமைப்பு என மொத்தமாக சேர்ந்து இந்த பாடலுக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்று தந்தது. காவாலா பாடல் யூடியுபில் பல்வேறு சாதனைகளை படைத்தது. இன்று வரை காவாலா பாடல் லிரிக் வீடியோ 13 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.