ஹைதராபாத்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது 'ஜெயிலர்' திரைப்படம். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் இதன் வரிசையில், த்ரில்லர், ஆக்ஷன் மற்றும் டார்க் காமெடியாக உருவான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள முன்னனி நடிகர் மோகன் லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி என ஏராளாமான நடிகர் பட்டாளம் நடித்து இருந்தனர்.
வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பீஸ்ட் படத்தின் சொதப்பலுக்கு பிறகு ஜெயிலர் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நெல்சன். இப்படம் வெளியான முதல் வாரத்தில் 48 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. இந்நிலையில் உலகளவில் தற்போது வரை 600 கோடி ரூபாய் வரை ஜெயிலர் படம் வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
600 கோடி ரூபாய் கிளப்பில் இடம் பெற்றுள்ள தென்னிந்தியா படங்களின் பட்டியலில் தற்போது ஜெயிலர் படமும் இணைந்துள்ளது. மேலும் ஜெயிலர், இந்திய அளவில் மட்டும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனாக 315 கோடியே 95 லட்ச ரூபாயும், உலக அளவில் 607 கோடியே 29 லட்ச ரூபாயும் வசூலித்து சாதித்து உள்ளது.