ஹைதராபாத்:நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம், கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.'ஜெயிலர்' பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுருந்தது. அதில் முதல் வாரம் ஜெயிலர் உலகம் முழுவதும் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
படம் வெளியாக 10 நாட்களை கடந்த நிலையிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். தமிழகத்தில் மட்டும் 8 நாட்களில் ரூ.235 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போதே 500 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தின் ஜெயிலர் படத்தின் வசூல் திங்கட்கிழமை சரிந்து ரூ.7.7 கோடியை மட்டும் வசூலித்துள்ளதாகவும், முந்தய நாள் வசூல் ரூ.18.7 கோடியாக இருந்த நிலையில் வெறும் 7.7 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக திரைப்பட வசூல் குறித்த தகவல்களை வெளியிடும் சாக்னில்க் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கான காரணமாக பலரும் பல்வேறு கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில், குறிப்பிடத்தக்கதாக உத்தரப்பிரதேச மாநிலம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் ரஜினி ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்திற்கு பாஜகவினர் தரப்பில் வரவேற்பு இருந்தாலும், ரஜினியின் தீவிர ரசிகர்கள் தலைவர் ரஜினிகாந்த் செய்தது வேதனையை அளிக்கிறது என்ற கருத்துக்களை வெளிப்படையாகவே தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த் தாய், தந்தை, இறைவன் காலில் மட்டுமே விழ வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது தன்னை விட வயதில் குறைந்த யோகி ஆதித்யநாத் காலில் விழ வேண்டிய அவசியம் என்னவென்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் ஜெயிலர் படத்தின் மீதான தாக்கல் சற்று குறைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் - 100வது நாளில் படக்குழு அசத்தல் அறிவிப்பு!