1400க்கும் மேற்பட்ட படங்கள், 5000க்கும் மேற்பட்ட பாடல்கள்; தமிழ் தொடங்கி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிப் படங்களுக்கும் இசை அமைத்தவர் இளையராஜா. தற்போது பாராளுமன்றத்திலும் மெட்டமைக்க போகிறார். நாடு முழுமைக்கும் ஸ்வரம் சேர்க்க போகிறார்.
பண்ணைபுரம் : தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்து பாவலர் சகோதரர்கள் மூலம் இசை பயின்று கச்சேரிகள் நடத்தி சென்னை வந்தடைந்தார் இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் பாமர மக்களுக்கு இசையின் மறுவடிவத்தை பாமரனின் பாடல்களை அறிமுகப்படுத்தினார். பிறகு அவரது ஆர்மோனியம் ஓய்வை அறியாது இசைத்துக்கொண்டே இருக்கிறது. நமது செவிகளும் தாகம் குறையாது இளையராஜாவின் இசையை சுவைத்துக்கொண்டே இருக்கிறது.
விருதுகள் :அதன் பிறகு 1985ல் சிந்து பைரவி, 1988 ருத்ரவீணா, 2009 பழஸிராஜா, 2015 தாரை தப்பட்டை ஆகிய படங்களுக்கு தேசிய விருது பெற்றார். 1988ல் தமிழக அரசின் கலைமாமணி விருது, அதுமட்டுமின்றி 2010ல் பத்ம பூஷன் மற்றும் 2018ல் பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ளார்.
விமர்சனம் : அண்மையில் வெளியான ”அம்பேத்கர்- மோடி” புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அந்த புத்தகத்தில் அம்பேத்கரின் திட்டங்களை மோடி நடைமுறைப்படுத்தி வருகிறார், என்று தெரிவித்தார். அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டுப்பேசியது விமர்சனத்திற்குள்ளானது. ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த இந்த விஷயம்தான் இவருக்கு ராஜ்யசபா பதவியை பெற்றுத்தந்தது என்றும் விமர்சிக்கப்படுகிறது.