நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் நடந்த காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிபெற்றவர் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. அதனைத்தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது காமெடி மற்றும் மிமிக்ரி திறமை மூலம் ஒவ்வொருத்தர் வீடுகளிலும் ஒரு அங்கமாக மாறியவர்.
அதன்மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன் தனுஷ் நடித்த ’3’ படத்தில் தனுஷின் பள்ளித்தோழனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது அறிமுகக் காட்சிக்கு திரையரங்குகளில் விசில் சத்தம் காதைக் கிழித்தது. இதற்கெல்லாம் காரணம் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் இவர் பெற்றுவைத்திருந்த குடும்பத்தலைவிகளின் நன்மதிப்புதான்.
டிவியில் இருக்கும்போதே பெண்கள், குழந்தைகள் உள்பட இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார். முதல் படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் ’மெரினா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ’மனம்கொத்திப்பறவை’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’எதிர் நீச்சல்’, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்த வெற்றிப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்த நட்சத்திரமாக உயர்ந்தார்.
தனது கடினமான உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தார். நடிகர் விஜயின் வெற்றி ஃபார்முலாவை பின்பற்றி குடும்பங்கள் ரசிக்கும் கமர்ஷியல் படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்தன.
முன்னதாக வியாபாரத்தில் விஜய் படங்களை நெருங்கிவிட்டார் சிவகார்த்திகேயன் என்று எல்லாம் பேச்சு எழுந்தது. இதனால் கொஞ்சம் அகலக்கால் வைத்த சிவகார்த்திகேயன் சில படங்களில் சறுக்கினார். சுதாரித்துக்கொண்டு மீண்டும் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.