சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் படத்துக்கும் விஜய் படத்துக்கும் போட்டி என்ற மனப்பான்மையில், இவர்களது ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வது தொடர்கதையாக இருக்கிறது. இருவரது படங்கள் ஒரே நாளில் வெளியானால் அன்று சமூக வலைத்தளங்களில் நிச்சயம் அனல் பறக்கும். இந்த நிலை தற்போது வரையிலும் மாறவே இல்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு வீரம் மற்றும் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில், அஜித் நடித்த வீரம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஜில்லா கொஞ்சம் சுமாரான படமாக அமைந்தது. வீரம் படத்தை சிவா இயக்கி இருந்தார். அதில் அஜித் படம் முழுவதும் வேட்டி, சட்டையுடன் வலம் வந்தார். வசனங்கள், சென்டிமென்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் இருந்ததால் வீரம் படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். ஜில்லா படத்தில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் திரைக்கதை சொதப்பலால் ரசிகர்கள் மத்தியில் எடுபடாமல் போனது.
அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அஜித், விஜய் படங்கள் இந்த ஆண்டு பொங்கலுக்கு மோதின. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படமும், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியாகின. ஆனால், இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. துணிவு படத்தில் வங்கிகள் பொதுமக்களை எப்படி ஏமாற்றுகின்றன? என்பதைப் பற்றி சொல்லியிருந்தார் இயக்குனர் வினோத். வாரிசு பக்கா குடும்ப படமாக எடுக்கப்பட்டு இருந்தது.
இரண்டு படங்களும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் அலப்பறைகள் ஓயவில்லை. வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிப் பேசி சண்டையிட்டுக் கொண்டனர். அதேபோல், துணிவு திரைப்படம் ஒரு காட்சி முன்னதாக திரையிடப்பட்டதால், ரசிகர்கள் திரையரங்குகளில் மோதிக் கொண்டனர். சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் கல் வீச்சு சம்பவமும் நடந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விஜய் முதல்முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஜய் நடித்த புதிய கீதை படத்திற்கு யுவன் இசை அமைத்திருந்தார். அதன் பிறகு தற்போதுதான் மீண்டும் விஜய் படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த கூட்டணிக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.