சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர், இயக்குநர் ஷங்கர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம், இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது.
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா என ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான போதும், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகே படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது எனலாம். அதன் பிறகும், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக பணிகள் தாமதமானது.
இதனையடுத்து, அண்மையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி தைவான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், சென்னையில் செட் அமைத்தும் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.