சென்னை: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக அறியப்படும் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், இந்தியன். இதில் நடிகர் கமல்ஹாசன் சேனாபதி, சந்துரு என தந்தை, மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுதந்திரப் போராட்ட வீரரான தந்தை கமல், ஊழல் செய்பவர்களை பழிவாங்குவது போன்ற கதைக்களத்தில் இந்தியன் படம் எடுக்கப்பட்டது.
இதில் அப்பா கமலின் கெட்டப் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்தியன் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை, லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான போதும், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகே படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. அதன் பிறகும், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக பணிகள் தாமதமானது. இதனையடுத்து, பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியது.
இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், வரும் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 7வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். 'இந்தியன் 2' படத்தை முடித்துவிட்டு எச்.வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் கமல்ஹாசன் தெலுங்கில் நாக் அஷ்வின் இயக்கும் கல்கி படத்தில் நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க:ஜப்பான் படத்தை பருத்திவீரன் உடன் ஒப்பிட்ட கார்த்தி!