சென்னை: வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம் ’இசை’. ரசிகர்களின் உணர்ச்சிகளுக்கு மருந்தாக இருப்பது திரை இசை. எத்தகைய துன்பங்களையும் இசை ஆறுதல் படுத்திவிடும் என்ற கருத்தும் ரசிகர்கள் சொல்வதுண்டு. அதிலும் நமக்கு நெருக்கமான மொழியும், இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் கரைய செய்து விடும் என்பது மற்றொரு கருத்து. அது போல தமிழர்களின் நெஞ்சங்களை தனது இசை மூலம் நிறைய செய்தவர் டி.இமான்.
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குறிய இசையமைப்பாளர்களில் ஒருவராவார். பெரிய படமோ, சின்ன படமோ இவரது பாடல்களே அந்த படத்திற்கு தனி அந்தஸ்தை கொடுத்து விடும். இருபது ஆண்டுகள் என்ற அசாதாரணமான இமானின் இசைப் பயணத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து 150 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ’தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்த இருபது ஆண்டுகளில் எந்த ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாத அற்புதமான இசை பயணம் இவருடையது. மெலடியா?, குத்துப்பாடலா? எதிலுமே தனித்து நிற்கக் கூடிய ஒலி வடிவத்தை தனக்கு அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறார். அவரது இசையின் வடிவம் “மாஸ் + கிளாஸ்” என சமமாக பயணித்து வருகிறது.
இவர் சுமார் 250 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 150 க்கும் மேற்பட்ட புதிய குரல்களை தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை குறைபாடுள்ள திருமூர்த்தி என்பவர் ’விஸ்வாசம்’ படத்தில் வரும் 'கண்ணான கண்ணே' பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பார்த்து, அவரை கூட்டி வந்து ’சீறு’, ’அண்ணாத்தே’ படத்தில் பாட வைத்தார் இமான்.