சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நான்கே படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இவரது மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களாக அமைந்தன. அதிலும் விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டு அதிகம் வசூலித்த படமாக உள்ளது. அது மட்டுமல்லாமல், கமல்ஹாசன் திரை வாழ்வில் அதிக வசூல் பெற்ற படமாகவும் மாறியது.
இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த கூட்டணி மாஸ்டர் படத்தில் மெகா வெற்றியை சுவைத்தது. இதனால் இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லியோ படத்தில் த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 22ஆம் தேதி ’நா ரெடி’ (Naa ready) என்ற பாடல் வெளியாக உள்ளது. மேலும் இந்த பாடலைப் விஜய் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை தெரிவித்துள்ளார். அதாவது ”எனக்கு 20 ஆண்டுகள் வரை திரைத்துறையில் அதிக காலம் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இல்லை என்றும், பத்து படங்கள் இயக்கி விட்டு சினிமாவில் இருந்து விலகி விடுவேன்” என தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் பேசிய அவர், “கிட்டத்தட்ட ஒரு வருடமாக லியோ படத்துக்காக உழைத்து வருகிறேன். இன்னும் பத்து நாட்கள்தான் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் மீதம் உள்ளது. அதன் பிறகு அவரை மிகவும் மிஸ் செய்வேன்” என்றார். குறும்படங்கள் எடுத்து வந்த காலத்தில் இருந்தே எனக்கு சினிமாவில் நீண்ட வருடங்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை. பத்து படங்கள் இயக்கிவிட்டு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்றார்.
என்னுடைய எல்சியூ (LCU) யுனிவர்ஸ் ஐடியா உடனே நடந்துவிடாது. இதற்கு என்னுடைய எல்லா நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்தனை குழப்பங்கள் உள்ளது. முதலில் அனைவரிடமும் அனுமதி பெற வேண்டும். நடிகர்களின் ரசிகர்களை அந்த படங்கள் திருப்திப்படுத்த வேண்டும் என நிறைய விஷயங்கள் உள்ளது. விஜய்யுடன் மீண்டும் இணைந்தது எனக்கு மிகவும் பிடித்துள்ளது அவருடன் இணைந்து எத்தனை படம் வேண்டுமானாலும் பண்ணலாம். மேலும் நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு லியோ குறித்து அப்டேட் வெளிவரும் என்றார்.
இதையும் படிங்க: மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!