சென்னை: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம், மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட இதுவரை ரூ.55 கோடி வசூலித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மடோன் அஸ்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் அருண் விஷ்வா, ''மாவீரன் திரைப்படம் இன்றைய வசூல் கணக்குப்படி படத்திற்காக செலவிட்ட பணத்தை எடுத்துவிட்டது. இனி வருவது லாபம் தான். சிவகார்த்திகேயனுக்கு நன்றி. பிரின்ஸ் படத்தில் ஏற்பட்ட தோல்விக்கு சிவகார்த்திகேயன் உதவி செய்தார்'' என்று தெரிவித்தார்.
வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது, ''நான் நிறைய வெற்றி படங்களில் நடித்துள்ளேன். ஆனால், மாவீரன் வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷல். படத்தின் வெற்றியை விட எனது நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். நான் டிவியில் இருந்து வந்ததால் நிறைய நடிகர்களின் பாதிப்பு எனது நடிப்பில் இருக்கும். அதற்கு வேறு வழி கிடையாது. நிறைய மேடைகளில் மிமிக்கிரி செய்து வந்தவன். நான் சினிமாவில் வரும்போது காமெடி தான் எனது அடையாளமாக இருந்தது.
சிறந்த நடிகன் என்பதை விட சிறந்த என்டர்டெயினராக இருக்க விரும்புகிறேன் நான் சிறந்த நடிகனாக இருப்பதைவிட சிறந்த என்டர்டெயினராக இருக்க விரும்புகிறேன். அதுதான் எனது ஆசை. மக்கள் இதனை சிலருக்கு மட்டும் தான் கொடுப்பார்கள். நல்ல இயக்குநர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் நல்ல நடிகராக மாற்றலாம். எனக்கு மடோன் அப்படிப்பட்ட இயக்குநர். என்மீது நம்பிக்கை வைத்து கதை எழுதினார். மடோனின் திறமையைப் பார்த்து படம் பண்ண விரும்பினேன். இதே டீம் மீண்டும் இணைந்தால் நிச்சயம் இன்னும் நல்ல படம் கொடுப்போம்'' என்றார்.
மேலும் ''டிவியில் இருந்த என்னை இத்தனை தூரம் அழைத்து வந்து வைத்துள்ளீர்கள். இப்படத்திற்கு உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. இதுபோன்ற பரிசோதனை முயற்சி படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். எனது போன படம் சரியாக போகவில்லை. இது வாழ்க்கையில் எப்போதும் நடப்பது தான். வெற்றி தோல்வி மாறி மாறி வரும். வெற்றி என்பது ஒரு பயணம். அது முடிவல்ல என்பதுதான் நான் கற்றுக்கொண்டது.
மாவீரன் படம் பார்த்து வாழ்த்திய திரை பிரபலங்களுக்கு நன்றி. எனக்கு விஜய் சேதுபதி உடன் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. மாவீரன் படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்தது அவருக்கும் எனக்கும் போட்டி இல்லை என்பதை நிரூபிக்க எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்'' என்று பேசினார்.
இதையும் படிங்க: Kanguva Glimpse: சூர்யா பிறந்தநாளில் கங்குவா அப்டேட்!