சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள கஸ்டடி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாக சைதன்யா, வெங்கட் பிரபு, கீர்த்தி ஷெட்டி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, "இது எனது முதல் தெலுங்கு படம். நாக சைதன்யாவுக்கு இது முதல் தமிழ் படம். இதுதான் நான் இயக்கியதில் அதிக பட்ஜெட் படம். என் மீது படத்தின் தயாரிப்பாளர் அதிக நம்பிக்கை வைத்தார். அவருக்கு நன்றி. மாநாடு ரிலீசுக்கு முன்பே நாக சைதன்யாவை சந்தித்து இக்கதையை சொன்னேன். அவர் ஓகே சொன்னதும் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்க திட்டமிட்டோம்" என்று கூறினார்
மேலும், "இது மிகப் பெரிய பயணம். இதுவும் எனது படம் போல ஜாலியா இருக்கும் ஆனால் புதிதாக இருக்கும். அரவிந்த் சாமி இந்த கதை கேட்டதும் அவரது கதாபாத்திரம் பிடித்ததால் நடிக்க விரும்பினார். அவர் வந்ததும் படம் பெரிய லெவலுக்கு சென்று விட்டது. மேலும் இந்த படத்தில் நடித்த சரத்குமாருக்கும் நன்றி. என் படத்தில் இளையராஜா பெயர் வர வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இப்படத்தில் நடந்தது எனக்கு மிகப் பெரிய பாக்கியம்.
தெலுங்கு, தமிழ் எல்லாம் ஒரே மாதிரி தான். ஆனால் அங்கு படப்பிடிப்பு நடத்த எளிதாக உள்ளது. இப்படத்தின் கதை நீங்கள் ஏற்கனவே பார்த்த சாதாரண கதைதான். ஆனால் புதிதாக சொல்ல முயற்சித்துள்ளோம். கீர்த்தி இப்படத்திற்காக நிறைய தமிழ் கற்றுக்கொண்டார். 90களில் நடப்பது போல் கதை என்பதால் இளையராஜா இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இருவரும் இசை அமைத்தது எனது பேராசை தான். எனது படத்தை இளையராஜா பார்த்துவிட்டு பாராட்டினார்" என்றார்.