சென்னை: நடிகை அமலா நடிப்பில் உருவாகிவரும் கணம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (செப்-2) நடைபெற்றது. அதில் பேசிய அமலா, ‘ஆழமான, அர்த்தமுள்ள படம் கணம், இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்" என்றார். அதன்பின் பேசிய கவிஞர் மதன் கார்க்கி கூறுகையில், ‘இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலாவின் புன்னகையை திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது.
டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே உலகம் அழியப்போகிறது என்பது போன்ற பெரிய விஷயங்களை தான் பயன்படுத்துவார்கள். ஆனால், பாசத்தை மையமாக வைத்து டைம் ட்ராவல் படத்தை அழகாக நகர்த்த முடியும் என்று இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் திரைக்கதையில் செய்துக் காட்டியிருக்கிறார்’ எனக் கூறினார்.
படத்தின் இசையில் மெலடி பாடல் அழகாக வந்திருக்கிறது. இந்த படத்திற்கான பாடலில் பணியாற்றும்போது, நேரத்தை பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இந்த படத்தில் 'இன்னும் நேரா காயங்களை எப்படி ஆற்ற' என்ற வரிகள் மிகவும் எனக்கு பிடிக்கும். ஒரு நபர் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ..? அவர்களும் அதே இடத்தில் தான் இருக்கிறார்கள்..?. ஆனால், காலம் உங்களைப் பிரித்து வைத்துவிடும். பொதுவாக நாம் இங்கிருந்து இவ்வளவு கிலோமீட்டர் என்று புவியியல் தூரங்களை பற்றி தான் பேசுவோம். ஒரே இடத்தில் இருந்துகொண்டே நேரம் தூரமாக இருக்க முடியுமா? இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் ஆனால், வெவ்வேறு காலகட்டத்தில் இருக்கிறார்கள்.
அப்போது அந்த நேரத்தை கைப்பற்றக் கூடிய வரிகளை ஆராய முடிந்ததற்கு ஸ்ரீ கார்த்திக்கு நன்றி. இதுமாதிரி புது புது வகையான படங்கள் வரும்போதுதான் சவாலான வரிகளை எழுத முடியும். வித்தியாசமான விஷயங்களையும் செய்ய முடியும்.
நடிகர் கார்த்தி இவ்ளோ அழகாக பாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. இம்மாதிரியான படத்திற்கு அழகாக தொகுத்து வழங்க நாசர் சாரால் தான் முடியும். அவரைத் தவிர வேறு யாரையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை. இப்படத்தில் பணியாற்றிய ரீத்து, சிறுவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள். வித்தியாசமான கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு புதுமுகங்களை வைத்து படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் ட்ரீம் வாரியர் நிறுவனம் எஸ்.ஆர். பிரபுவிற்கும், ஸ்ரீ கார்த்திக்கும் நன்றி என்றார்.
நடிகர் நாசர் பேசும்போது,"4 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் டைம் மெஷின் தரை இறங்கி இருக்கிறது. ஒரு தயாரிப்பாளரே அழைத்து இயக்குநரிடம் கதைக் கேளுங்கள் என்று கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எஸ். ஆர். பிரபு அவருடைய நிறுவனத்தில் ஒரு படம் மாதிரி இன்னொரு படம் இருக்க கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பார். அவர் ஸ்ரீ கார்த்தியை கண்டுபிடித்தது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், சைன்ஸ் பிக்ஷன் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான விஷயம்.
இந்தியாவில் இது போன்று படம் அதிகம் வருவதில்லை. ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போது குழந்தை மாதிரி மாறி விட்டேன். நிறைய பேசினோம். இந்த விஷயங்கள் புரியாது அந்த விஷயங்கள் புரியாது, என்று பல மணி நேரம் சண்டை கூட போட்டு இருக்கிறேன். இந்தக் கதையை ஜுராசிக் பார்க் படத்தில் அந்தத் தாத்தா கூறுவதுபோல விளக்கமாக கூறினால் தான் புரியும் என்றேன்.
ஆனால், இப்படம் எனக்கு அற்புதமான பயணமாக இருந்தது. அறிவியலைப் பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் நிறைய விஷயங்களை பேசினோம். இந்த குழுவுடன் பணியாற்றியதில் 30 வயது குறைந்தது போல உணர்ந்தேன். ஒரு புத்தகத்தில் அழகான கதை இருக்கவே இருக்கிறது என்றால் அதில் உள்ள காகிதங்கள் தான் நான். உண்மையாகவே ஒரு தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் கதை. அமலா அழகான ஆன்மா கொண்டவர்.
அவரின் அறிமுக கால கட்டத்தில் இருந்தே பழக்கம். அவர் இந்த துறைக்கு மீண்டும் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு டைம் டிராவல் தேவையே இல்லை. அந்த காலம் உறைந்து, அப்போது இருந்தது போலவே இருக்கிறார். அவரை பார்ப்பதை விட பேச வைத்து கேட்டால் அழகாக இருக்கும். பேச்சில் தெளிவு, பரிவு, பாசம் அனைத்தும் நிறைந்திருக்கும். ஆகையால் தான் நான் தள்ளி நின்று கேட்டுக்கொண்டே இருந்தேன்.
அமலா கதாபாத்திரம், என்னுடைய கதாபாத்திரம், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் தேடித் தேடி கண்டுபிடித்து வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக். சின்ன பசங்களைப் பார்க்கும்போது சாயலில் அவர்கள் போலவே இருக்கிறார்கள்.
இப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இந்த தருணம் மறுபடியும் கிடைத்தால் நான் தவறு செய்யும்போது அதை செய்யாமல் இருக்க முடியாதா? என்று தோன்றும். ஒரு காலத்தில் கோட்பாடு ரீதியாக இது நடக்கக் கூடும். அதை இந்த படத்தில் நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
இந்த படம் பொழுதுபோக்கான படம் என்பதை விட ஈடுபாட்டுடன் பார்க்கக்கூடிய படம் என்று சொல்வதே சரியாக இருக்கும். 2 1/2 மணி நேரம் சிரித்துக்கொண்டே இருக்கும் படம் கிடையாது. நம் மனதினுடைய மெல்லிய உணர்வுகளைத் தூண்டி விட வேண்டும். அது இப்படம் நிச்சயம் செய்யும்.
ஷர்வானந்துடன் சில படங்களில் பழகியிருக்கிறேன். விடா முயற்சி என்பது பழக்கமான வார்த்தையாக இருந்தாலும், ஷர்வானந்துக்கும் பொருந்தும். நானும் அவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அதில் அவருக்கு எது மேலே பட்டாலும் துடைத்துக்கொண்டே இருக்கும் படியான கதாபாத்திரம். இதை மிக அழகாக செய்திருந்தார். இந்தப் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படம் எல்லாம் மனங்களையும் போய் சேரும் என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய நடிகர் சதீஷ், ‘இந்த கதை கேட்கும் போது இது மாதிரி யாரும் கதை கூறியிருக்க மாட்டார்கள். இடையில் கரோனா வந்தாலும் படம் பொறுமையாக வெளியானாலும் நன்றாக வர வேண்டும் என்பதில் எஸ்.ஆர்.பிரபு பிடிவாதமாக இருப்பார். அவருக்கு திருப்தி ஆகும் வரை விடமாட்டார். இப்படம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். இப்பவே செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பயணித்து பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது.
இந்த படம் மூலம் ஷர்வானந்த் எனக்கு சிறந்த நண்பராகி இருக்கிறார். எனது அப்பா அமலா மேடம் உடைய பெரிய விசிறி. நியாயமாக அமலா மேம் அக்காவாக நடித்திருக்க வேண்டும். ஆனால், அம்மாவாக நடித்திருக்கிறார்.