கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் 'ஹிட் லிஸ்ட்' படத்தின் பூஜை இன்று(செப்.1) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் ஆர்பி.சௌத்ரி, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்கள் கார்த்திகேயன் மற்றும் சூர்யகதிர் இருவரும் இயக்குகின்றனர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் விக்ரமன், “எனது முதல் படம் 'புது வசந்தம்' பூஜையின்போது அவ்வளவு படபடப்பு இல்லை. இப்போது எனது மகன் நடிக்கும் படம் என்பதால் மிகவும் படபடப்பாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பே என் மகன் நாயகனாக நடிக்க வேண்டியது. ஆனால், அப்போது அது முடியவில்லை. ரவிக்குமாருக்கு நன்றி. தமிழ் சினிமாவில் அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியது ஆர்.பி.சௌத்ரிதான். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்'' எனப் பேசினார்.
அறிமுக நடிகர் விஜய் கனிஷ்கா பேசுகையில், ''இது மிகவும் மகிழ்ச்சியான நாள். இது எனக்கு நன்றி சொல்லும் மேடை. எனது வெற்றிக்காக இந்த இரண்டு இயக்குநர்களும் உழைக்கின்றனர். சக மனிதரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்துள்ளார். கலைராணி அவர்களுக்கு நன்றி. ரவிக்குமாருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ரொம்ப நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை'' என்றார்.