சிலரைப்பற்றி எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். அவர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இசையில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் எனப் பலர் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி பாதை வகுத்து, அதில் வெற்றி கண்ட யுவன் இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என யாரிடமும் சென்று உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் அதில் யுவன் ஷங்கர் ராஜா முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பார். பல இயக்குநர்களும் யுவன் ஒரு படத்தின் இசையை படத்தின் கதைக்கேற்ப, அந்த உணர்ச்சிகளை புரிந்து ஒரு கதாசிரியரின் பார்வையிலிருந்து இசையமைக்கும் வல்லவர் எனப் பாராட்டியுள்ளனர்.
இசைக்குத் தரம் முக்கியம்தான். அதேசமயம் அந்த இசைக்கு ஈரமும் முக்கியம். தமிழர்களை படுத்திக்கொண்டிருந்த இசையை எம்.எஸ்.வி. அழகுபடுத்தினார், இளையராஜா எளிமைப்படுத்தினார், ஏ.ஆர். ரஹ்மான் அடையாளப்படுத்தினார், யுவன் ஈரப்படுத்தினார். ஆம், யுவனின் இசையும், குரலும் ஈரத்தால் நிறைந்தவை.
ஒரு பாடலை பெரும்பாலான இசையமைப்பாளர்கள் ஏதேனும் ஒரு கருவியை வைத்து ஆரம்பித்திருந்த சமயத்தில் யுவனோ ப்ரீ லூடில்(Prelude) தன் குரலை வைத்து ஆரம்பித்தார். அன்றிலிருந்து அவரது குரலுக்கெனவும் பலரின் காதுகள் காத்திருக்க ஆரம்பித்தன. அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் ஒரு படத்திற்கு ஆல்பம் ஹிட் கொடுத்துவிட்டாலே, பலரின் கால்கள் தரையில் நிற்பதில்லை, காதுகள் பிறரின் குரலைக் கேட்பதில்லை.
ஆனால், 2000த்தின் தொடக்கத்திலிருந்து ஏறத்தாழ 12 வருடங்கள் யுவன் இசையமைத்த பெரும்பாலான திரைப்படங்களின் ஆல்பம் ஹிட். இருப்பினும் அவர் எந்த மேடையிலும் தம்பட்டமோ, துள்ளலோ செய்ததில்லை. அதுமட்டுமின்றி கம்யூனிசம், பெரியாரிசம் என்று சித்தாந்தத்தை குறிப்பதுபோல் யுவனிசம் என்ற ஒரு சொல் முதன்முதலாக உருவானது, இவருக்கு மட்டும்தான். அந்த அளவுக்கு அவர் மீது அவரது ரசிகர்கள் வெறிபிடித்திருக்கிறார்கள்.
யுவன் இந்த 25 ஆண்டுகளில் இசையமைக்காத ஜானர் இல்லை. சின்ன பட்ஜெட் படமோ, பெரிய பட்ஜெட் படமோ எனக்கும், என் இசைக்கும் பட்ஜெட் பாகுபாடு கிடையாது என்று இருப்பது அவரிடம் மதிக்கப்பட வேண்டிய குணம். அவரை எந்த வட்டத்திற்குள்ளும் அடக்க முடியாது. அவரால் செல்வராகவனுக்கு ஆகச்சிறந்த மெலடியை இசைக்க முடியும், ராமுக்கு பேரன்பை கொடுக்க முடியும், அமீருக்கு பருத்தி வீரனை அறிமுகம் செய்ய முடியும்.