சென்னை:இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்து வெளியான 'அடியே' படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று (செப்.13) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், கௌரி கிஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட 'அடியே' படத்தின் கதாநாயகி கௌரி கிஷன் பேசும்போது, "ஜானு கதாபாத்திரத்தை செந்தாழினி மறக்கடிக்க வைத்ததாக என்னிடம் எல்லோரும் சொன்னார்கள். ஆனால் ஜானு எனக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம். வாழ்த்துகளுக்கு நன்றி. அடுத்து சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தில் நடிக்கிறேன். இதே தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது. 'அடியே' படத்தில் இயக்குநர் என்னை அழகாக காட்டியுள்ளனர்" என்று பேசினார்.
அவரை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், "படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த படம் ரிலீஸ் ஆகும் போது ஜெயிலர் 2ஆவது வாரம். அதனால் மக்கள் வருவார்களா என்று சிறிய குழப்பம் இருந்தது. இந்த படத்தில் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று எண்ணம் உள்ளது. அது என்னுடைய அடுத்த படத்தில் நடக்கும். இந்த படம் சரியாக போகவில்லை என்றால் சாதாரண படமாக இருந்திருக்கும். வெற்றி அடைந்ததால் அடுத்த படமும் வித்தியாசமாக பண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. கண்டிப்பாக அதுவும் வித்தியாசமாக தான் இருக்கும்" என்றார்.