சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தனது கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார். கோலிவுட்டின் மிகப் பெரிய நடிகர்களின் மார்க் ஆண்டனி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆனாலும் ஹீரோவாகவும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் ’அடியே’ திரைப்படம் வெளியானது. ’parellel universe' என்ற வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்த அப்படம் ரசிகர்களை கவர்ந்தது.
Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ’டியர்’. விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருமளவில் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.