காமெடி கிங் கவுண்டமணி, யோகிபாபு கூட்டணியில் நடிக்கும் 'பழனிச்சாமி வாத்தியார்' (Palanisamy vathiyar) படத்திற்கான பணிகள் பூஜையுடன் இன்று (ஜன.20) தொடங்கின. 80, 90-களில் கவுண்டமணி இருந்தாலே படம் வெற்றிதான் என்றிருந்தது.
அந்த அளவிற்கு தனக்கே உரிய பாணியில் எவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரத்தையும் மிகவும் யதார்த்தமான தனது பேச்சில் நகைச்சுவை செய்து கலாய்ப்பதில் இவருக்கு இணை வேறு யாருமில்லை என்று தான் சொல்ல வேண்டும். நகைச்சுவை உலகில் தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்த இவர் தனக்கென்று ரசிகர்களிடையே முத்திரை பதித்தவர் ஆவார்.
இன்றைக்கும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என சோசியல் மீடியாவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், அதில் இவரின் வசனங்கள் அடங்கிய மீம்ஸ்களும், இவரது அசத்தலான கலாய் வசனங்களும் இடம் பெற்றிருக்கும். கடந்த 2016-ல் வெளியான 'வாய்மை' இவர் கடைசியாக நடித்த படமாகும். இதனைத்தொடர்ந்து, 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் 'பழனிச்சாமி வாத்தியார்' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார், கவுண்டமணி. இந்த படத்தில், யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். இதனால், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும் இரண்டாவது படம் "பழனிச்சாமி வாத்தியார்". அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர், கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைக்கூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழ் மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.