ஹைதராபாத்: தென்னிந்தியாவில் மலையாள சினிமாவுக்கென்று தனிச் சிறப்பிடம் உள்ளது. தற்போது இந்திய அளவில் புகழ்பெற்றுள்ள மலையாள சினிமாவின் முதல் நடிகை பி.கே.ரோஸி. இவரது இயற்பெயர் ராஜம்மா. இவர் கடந்த 1903ஆம் ஆண்டு கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் பிறந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ராஜம்மா, சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். இதனால் இவரது குடும்பம் வறுமையில் வாடியது.
புல் வெட்டும் வேலை செய்துவந்த ராஜம்மாவுக்கு சிறுவயது முதலே நடிப்பு, இசை உள்ளிட்ட கலைகளில் அதிக ஆர்வம் இருந்தது. அவரது உறவினர் ஒருவர் நாடகத்தில் நடிக்கும்படி அவரை ஊக்குவித்தார். இதையடுத்து, வீட்டின் அருகே இருந்த சிறிய கலைப் பள்ளியில் சேர்ந்து நடிக்க கற்றுக்கொண்டார். சிவன், பார்வதியை அடிப்படையாகக் கொண்ட தமிழ் நாட்டுப்புற நாடகங்களில் நடித்தார்.
சாதியக் கொடுமைகள் அதிகரித்துக் காணப்பட்ட அந்த காலகட்டத்தில், பெண்கள் சினிமாவில் நடிப்பதை பெரும் இழிவாகக் கருதினர். ஆனால், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், யார் என்ன பேசினாலும் கவலைப்படாமல், சினிமாவில் நடிக்க வேண்டும் என உறுதி பூண்டிருந்தார். இவரது குடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகு, அவரது பெயரை ரோஸம்மா என்று மாற்றினர். பின்னர் அது ரோஸியாக மாறியது.
கடந்த 1930ஆம் ஆண்டு வெளியான முதல் மலையாள சினிமாவான 'விகதகுமாரன்' படத்தில் ரோஸி நடித்தார். ஜே.சி.டேனியல் இயக்கிய இப்படத்தில் நாயர் சமூக பெண்ணாக அவர் நடித்திருந்தார். பட்டியலினத்தைச் சேர்ந்த ரோஸி, நாயர் பெண்ணாக நடித்ததற்கு நாயர் சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 'விகதகுமாரன்' பிரீமியர் காட்சிக்கு ரோஸி வந்தால், தாங்கள் வர மாட்டோம் என சினிமாத்துறையில் இருந்த முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். ரோஸிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கில் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.
இப்படத்தில் நடித்ததற்காக நாயர் சமூகத்தினர் அவரது வீட்டிற்கு தீ வைத்ததாகவும், சாதிக் கொடுமைகள் தாங்க முடியாமல் தமிழ்நாட்டிற்கு தப்பியோடிய ரோஸி, லாரி ஓட்டுநரான கேசவன் பிள்ளையை திருமணம் செய்து கொண்டு, வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.கே.ரோஸியின் வாழ்க்கையை மையமாக வைத்து கடந்தாண்டு திரைப்படம் எடுக்கப்பட்டது.
மலையாள சினிமாவின் முதல் நடிகை என்ற பெருமையோடு, பல்வேறு சாதியக் கொடுமைகளுக்கு ஆளான பி.கே.ரோஸிக்கு இன்று 120ஆவது பிறந்தநாள். அதையொட்டி அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது. அதில் ரோஜாப்பூக்களுடன் ரோஸியின் புகைப்படம் ஓவியம் போல இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: எனது 12 ஆண்டு கால கனவு இப்படத்தில் உள்ளது - 'டாடா' படம் குறித்து நடிகர் கவின் உருக்கம்