சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பல்வேறு படங்கள் வெளியாகி ஹிட் அடித்திருந்தாலும், திரையரங்குகளில் வெளியான பல படங்கள் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லாம். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, குறைந்த பட்ஜெட் படங்கள் பெருவாரியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதை போன்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் பெருமளவில் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த நிலையில், கடும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும், ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களின் பொறுமையை சோதித்த படங்களும் இந்த ஆண்டு அதிகளவில் வந்துள்ளன.
ஜப்பான்: ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம், ஜப்பான். கார்த்தியின் 25வது படம் என்ற எதிர்பார்ப்புடன், பல்வேறு ப்ரோமஷன்களுக்கிடையே வெளியான இப்படம், சொதப்பல் திரைக்கதையால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
மைக்கேல்:ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், திவ்யன்ஷா கௌதம், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் மைக்கேல். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, இப்படம். ஆனால் வெளியானபோது அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் தகர்ந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் சூர்யா போல் காட்ட முயற்சித்து எடுக்கப்பட்ட சந்தீப் கிஷனின் ஸ்கிரீன் பிளே ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதியின் கேமியோவும் படத்தைக் காப்பாற்றவில்லை.
வாத்தி:வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வெளியான திரைப்படம், வாத்தி. தமிழில் 'வாத்தி' என்றும், தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் இப்படம் வெளியானது. கல்வி தனியார்மயம் பற்றி பேசிய இப்படம், 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஆனால் கதையில் ரசிகர்களை இப்படம் ஏமாற்றியது. கல்வியைப் பற்றி பேசியிருந்தாலும் அதை சொன்ன விதத்தில் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக அமைந்தது.