சென்னை:இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து ரசிகர்களால் பெரிதளவு எதிர்பார்க்கப்பட்ட 'துருவ நட்சத்திரம்' படம், 2018ஆம் ஆண்டிலயே திரைக்கு வரவிருந்த நிலையில், நிதி நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்னைகளால் திரைப்படம் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.
இறுதியாக, துருவ நட்சத்திரம் நவ.24 அன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், மீண்டும் படம் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. இந்நிலையில், இயக்குநர் கவுதம் மேனன், தனது X தளத்தில் படம் குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு பார்வை, நிறைய கனவு, தளராத அர்ப்பணிப்பால் பேனா மற்றும் பேப்பரில் இருந்த துருவ நட்சத்திரம் இன்று ஒரு திரைப்படமாக உருவெடுத்துள்ளது. அனைத்தும் எங்களுக்கு எதிராக இருந்தால் கூட, எங்களின் ஆர்வமும் அர்ப்பணிப்பும்தான் இந்த படத்தை விரைவில் உங்களுக்காக உலகெங்கிலும் உள்ள திரையங்குகளில் கொண்டு வர உதவப் போகிறது என நம்புகிறோம்.
நவ.24ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்தபோது, அதனை சாத்தியமாக்க நாங்கள் மலையைக் கூட நகர்த்த முயற்சித்தோம். நாங்கள் அறிவித்த தேதியில் படம் வெளியிடாமல் போனது எங்களுக்கு வருத்தமளிக்கவில்லை என சொன்னால், நாங்கள் பொய் சொல்வதாக ஆகிவிடும். இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான முக்கிய காரணம், நாங்கள் படத்தை கைவிடவில்லை என உறுதிபடுத்தவே. எங்களது சக்திக்கு உட்பட்டும், மீறியும் பல தடைகளைத் தாண்டி துருவ நட்சத்திரத்தைத் திரைக்கு கொண்டு வர அனைத்தையும் செய்து வருகிறோம்.
பார்வையாளர்களாகிய நீங்கள் அனைவரும்தான் எங்களுக்கான சியர்லீடர்ஸ். உங்களிடமிருந்து கிடைக்கும் அளவில்லாத அன்பும், ஆதரவும் பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன, எங்கள் வலிமைக்கான தூண்களாக இருக்கும் உங்களுக்கு நன்றி தெரிவிக்க, இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்.
இந்த இறுதிக் கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் வேளையில், எங்களது படைப்பை உங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய நாளுக்காக நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். விரைவில் இப்படம் வெளிச்சத்தைக் காணும். ஜான் மற்றும் பேஸ்மெண்ட் டீமின் சினிமா பயணத்தை உங்களுடன் தொடங்க நாங்கள் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"இயக்குநர் அமீரை இழிவுபடுத்திய ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்" - பாரதிராஜா!