சென்னை: பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான ஜாலி பாஸ்டியன் (57), நேற்று (டிச.26) இரவு மாரடைப்பால் காலமானார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஜாலி பாஸ்டியன், பெங்களூருவில் பிறந்து வளர்ந்துள்ளார். திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, மம்முட்டி, மோகன்லால், சிவராஜ் குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோருடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொத்தம் 900 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.
சமீபத்தில் வெளியான லாக்டவுன் டைரி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். கிறிஸ்துமஸ் விழாவிற்காக குடும்பத்தோடு கேரளாவின் ஆலப்புழாவிற்குச் சென்ற ஜாலி பாஸ்டியன், நேற்று இரவு 9 மணி அளவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோரது படங்களில் இருந்து பணியாற்றி, 25 ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மக்கள் தொடர்பாளராக இருந்த கடையம் ராஜு காலமாகியுள்ளார். உடல்நிலை சரியில்லாமல் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று (டிச. 27) காலை 7 மணியளவில் அவர் காலமானார்.