சென்னை:இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லால், எம்.எஸ் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம், 'டாணாக்காரன்'. அனைவரிடமும் பெரும் வரவேற்பைப்பெற்று வருகிறது. இந்தப்படம் காவலர் பயிற்சிப்பள்ளியில் நடக்கக்கூடிய பயிற்சிகள், காவலர்களுக்கு நடக்கும் கொடுமைகள் ஆகிய பின்னணியைக் கொண்டு காட்சியமைக்கப்பட்டுள்ளது.
கொடுமைகள் நடக்க வாய்ப்பில்லை: 'டாணாக்காரன்' திரைப்படம் போல காவலர் பயிற்சிப்பள்ளியில் காவலர்களுக்கு கொடுமைகள் நடக்கின்றனவா? என்பது குறித்து முன்னாள் ஐபிஎஸ் அலுவலரும் ஓய்வுபெற்ற டிஜிபியுமான ஜாங்கிட் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். டாணாக்காரன் படத்தில் காட்சியமைத்தது போல் காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் கொடுமைகள் முன்பு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும், தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவலர் பயிற்சிப்பள்ளியில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, அணுகுமுறை என அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களை மட்டுமே காவலர் பயிற்சிப்பள்ளியில் பணிக்கு நியமிப்பதாகவும், உயர் அலுவலர்கள் தவறுகள் நடக்கிறதா என அடிக்கடி விசிட் செய்து கண்காணிப்பில் ஈடுபடுவதால் படத்தில் காண்பிக்கும் குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.