ட்ரிப்பர் என்டர்டெயின்மென்ட் - மதுசூதனன் தயாரித்து இயக்குநர் துவாரக் ராஜாவின் இயக்கத்தில் ஆர்.எஸ் கார்த்திக், லிங்கா உள்ளிட்டோர் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள படம், பரோல்.
பரோல் படத்தின் படக்குழுவினருடனான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆர்.எஸ். கார்த்திக், லிங்கா, நடிகைகள் கல்பிகா, மோனிஷா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆர்.எஸ். கார்த்திக், 'சினிமாவில் புதிதாக வருபவர்கள் நம்புவது கதை. கதை தான் வெற்றி என்பதை நம்பி இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். இந்தப் படம் கிடைக்காமல் இருந்தால் வருத்தப்பட்டிருப்பேன். இந்தப் படத்தில் நானும் லிங்காவும் ஒன்றாக நடித்ததில் மகிழ்ச்சி.
இதுவரை வடசென்னை பகுதி என்றால் சண்டைக்காட்சிகள் தான் அதிகமாக இருக்கும். இந்தப் படத்திலும் இருக்கிறது. நானும் வடசென்னை தான். அங்கு எல்லாம் ஒரிஜினலாக இருக்கும். படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்' என்று கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் லிங்கா, 'இயக்குநர் துவாரகாவுக்கு சினிமா என்றால் அவ்வளவு பிடிக்கும்; இது ஒரு வித்தியாசமாக, மாறுபட்ட முயற்சியில் எடுக்கப்பட்ட படம்' எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், 'பரோல் யாருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், நவம்பர் 11இல் எல்லா தமிழர்களுக்கும் கிடைக்கும். இந்தப் பரோல் வாகை சூட வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன். குமரி எல்லையில் இருந்து வரலாமா வேண்டாமா என்று எனக்குள் ஒரு பட்டிமன்றம் நடக்க, தற்போது வந்துள்ளேன்.
நான் தமிழ்நாட்டின் அரசியலை ஒரு வெள்ளோட்டமாக பார்த்தால் நான் இருக்கும் இடத்திற்குத் தான் வெற்றி வந்து சேர்ந்திருக்கிறது. பரோலில் நானும் இருப்பதால் இந்தப் படம் வெற்றி பெறும்.
கடைசி காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்னதால் நானும் நடித்தேன். சென்னை என்றாலே வட சென்னை தான். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். தமிழ் சினிமாவிற்கு ஒரு பாணி இருந்தது. அந்தப் பாணியில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை தெற்கில் இருந்து வந்த பாரதிராஜா கொடுத்தார்’ என்றார்.
முன்னதாக சிறைச்சாலை குறித்து பேசியவர், 'அது சித்ரவதைக் கூடம். சமர்ப்பிக்கப்பட்டவர்களின் புகலிடம். ஒரு மனிதனை சின்னாபின்னமாக்கி சிதைக்கும் தொழிற்சாலை’ என்றார். அப்போது பரோல் என்றாலே பலருக்கும் பேரறிவாளன் தான் ஞாபகத்துக்கு வருவார் என்பது குறித்த கேள்விக்கு, 'பேரறிவாளனுக்காக நிறைய பேசி இருக்கிறேன். நான் அவருக்காக பேசியது போல் தமிழ்நாட்டில் வேறு யாரும் பேசவில்லை. அவர் பரோலில் வரவில்லை.