தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரஜினி, கமல் படங்களில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல் மறைந்தார்!

சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஆர்.விட்டல் மாரடைப்பால் உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 27, 2023, 3:33 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்த படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர், ஆர்.விட்டல். இவர் நேற்று (ஜூலை 26) சென்னையில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 91. இவரது மனைவி கமலம் ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார். விட்டல்புகழ் பெற்ற ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 40 படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றினார்.

மேலும் SP முத்துராமன் இயக்கத்தில் 71 படங்கள், இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் 16 படங்கள், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 12 படங்கள், யோகானந்த் இயக்கத்தில் 10 படங்கள் எனப் பல்வேறு தமிழ் சினிமா இயக்குநர்கள் படத்தில் படத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

மேலும் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 18 படங்கள், கமல்ஹாசன் நடித்த ஜப்பானில் கல்யாணராமன், விக்ரம் உள்ளிட்ட 10 படங்கள், ரஜினிகாந்த் நடித்த பாயும் புலி, படிக்காதவன், கழுகு, ராஜா சின்ன ரோஜா, முரட்டுக்காளை என 33 படங்கள், ஜெய்சங்கர் நடித்த 18 படங்கள் எனப் பல்வேறு பிரபல நடிகர்களின் படத்திலும் படத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: India Couture Week 2023: ராம்ப் வாக்கில் திகைக்க வைத்த அதிதி ராவ் - ஆடை அழகின் பின்னணி என்ன?

ஆர்.விட்டல் படத் தொகுப்பாளராக மொத்தம் 170 படங்களில் பணியாற்றியுள்ளார். அது மட்டுமின்றி முத்தான முத்தல்லவோ, பெண்ணைச் சொல்லி குற்றமில்லை, முடிசூடா மன்னன் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

மேலும் வீட்டுக்கு வந்த மருமகள், தொட்டதெல்லாம் பொன்னாகும், முடிசூடா மன்னன் உன்னைத் தான் தம்பி, எங்களுக்கும் காதல் வரும், முத்தான முத்தல்லவோ ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். இவரது மறைவிற்கு திரைத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த வருடம் தொடக்கத்திலிருந்து சினிமா பிரபலங்கள் மனோபாலா, மயில்சாமி மறைந்த நிலையில், தற்போது பிரபல படத் தொகுப்பாளர் உயிரிழந்தது சினிமா உலக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..." சின்னக்குயில் சித்ரா பிறந்தநாள் ஸ்பெஷல்

ABOUT THE AUTHOR

...view details