பெப்சி செயலாளர் சுவாமிநாதன் சென்னை: சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழ் சினிமாவில் தமிழ் தொழிலாளர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று பேசினார். இது பலவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஆந்திராவில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகர் பவன் கல்யாண், குறுகிய மனப்பான்மையில் இருந்து தமிழ் சினிமா வெளியே வர வேண்டும் என்றும் ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது என பேசினார். பவன் கல்யாண் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்சங்க (SIAA) தலைவர் நடிகர் நாசர் விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், "தமிழ் திரையுலகில், மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பணிபுரிய அனுமதிக்கமாட்டார்கள் தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல், தமிழ் திரையுலகில் இது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக முதலில் குரல் எழுப்புவது நானாக தான் இருப்போன். அதுமட்டுமல்லாமல் பான் இந்தியா, குளோபல் என சினிமாத் துறை விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழி நடிகர்கள், இயக்குநர்கள், தொழிலாளர்கள் என தேவை அதிகமாக உள்ளது. அதனால் இந்த சூழலில் இப்படி ஒரு முடிவை யாரும் எடுக்க மாட்டார்கள் என நம்புவதாக நடிகர் நாசர் கூறினார்.
மேலும், தமிழ் திரையுலகில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக பெப்சி(Film Employees Federation of South India) தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தமிழ் திரைபடங்களை தமிழகத்திற்குள்ளேயே எடுக்க வலியுறுத்துவது போன்ற நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். அது தொழிலாளர்களில் பாதுகாப்பு நலன் கருதியே தவிர நடிகர்களின் திறமை மற்றும் கலைஞர்களின் திறமை பற்றி அல்ல" என்று நாசர் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் சுவாமிநாதன் நமது ஈடிவி பாரத்திற்கு பிரேத்யேக பேட்டியளித்தார், அதில், "தமிழ் படங்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தும் போது தமிழ் தொழிலாளர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது யாரோ தவறாக மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் நடிகர்கள் தமிழ் கலைஞர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாக, தவறாக மொழி பெயர்த்து, இதனை பெரிய பிரச்சனை ஆக்கியுள்ளனர். நாங்கள் அப்படி சொல்லவில்லை. இது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்.
வெளி மாநிலங்களில் இருந்துவரும் தொழிலாளர்கள் அதிகரித்ததால் நமது தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. நடிகர் பவன் கல்யாணுக்கு தவறாக செய்தி போயுள்ளது. ஆனாலும் அவர் நல்ல விதமாக கூறியுள்ளார். அவரும் தமிழில் இருந்து சென்றவர்தான். எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆர்.கே.செல்வமணி மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி இந்த பிரச்சனைக்கு உரிய விளக்கம் அளிக்க உள்ளோம்" என்று சுவாமிநாதன் கூறினார்.
இதையும் படிங்க:தென்னிந்திய சினிமாவில் தடம் பதிக்க தயாராகும் நடிகை அம்ரின்