சென்னை: தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் நாயகனாக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. அதுமட்டுமின்றி தமிழைத் தவிர்த்து ஏனைய மொழிகளிலும் வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு வேடங்களில் நடித்து மற்ற மொழிகளிலும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிவருகிரார்.
இவர் இதுவரை தமிழில் ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். ரசிகர்கள் இவரை மக்கள் செல்வன் என்று அன்புடன் அழைக்கின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி.ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த பெயரிடப்படாத படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மிணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர் கோவிந்தராஜும், கலை இயக்கத்தை ஏ. கே. முத்து ஆகியோர் மேற்கொண்டிருக்கின்றனர். தினேஷ் சுப்பராயன் இப்படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.