சென்னை:ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தை உலகெங்கும் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு மட்டும் இன்றி, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஜெயிலர் வெளியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு திரையரங்கமும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
திரையரங்கிற்கு வெளியே ரசிகர்கள் ரஜினியின் கட் அவுட் வைத்து அதற்கு முன்பு நின்று ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர். "வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்ன விட்டு எங்கும் போகல" என்ற படையப்பா படத்தின் மிகப் பிரபலமான டயலாக் இன்றும் நடிகர் ரஜினிக்கு மட்டும்தான் கச்சிதமாகப் பொருந்தும் என்ற வகையில் ஜெயிலர் படம் இருப்பதாகவும், அவர் நடை, உடை, பாவனை என ரசிகர்கள் இஞ்ச் இஞ்சாக ரசித்துப் படத்தை வசூல் ரீதியாக இமயமலை எட்டச் செய்து வருகின்றனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில் ஜெயிலர் முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் வெளியானது. ஆனால் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கேரளம் மாநிலத்தின் பல திரையரங்குகள் என அனைத்து இடங்களிலும் ஜெயிலர் காலை 6 மணிக்கே வெளியாகி ரசிகர்களுக்கு திவ்ய தரிசனம் வழங்கியுள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் கூடியுள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் உலகமே ரஜினியின் ஜெயிலர் படத்தைக் கொண்டாடி வரும் நிலையில் அவர், ரசிகர்களுக்கான தரிசனத்தைத் திரையரங்கில் வழங்கி விட்டு தெய்வீக தரிசனத்தைத் தேடி நேற்று இமயமலைக்குச் சென்றுள்ளார்.