சென்னை: திரை இசைப் பாடல்கள் அன்றிலிருந்தே ரசிகர்களின் வாழ்வில் நீங்கா இடம் பிடித்தவை. அதில் பாடலாசிரியர்களின் பங்கும் அளப்பரியது. இசையமைப்பாளரை கொண்டாடும் சமூகம் பாடலாசிரியர்களை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அதையும் தாண்டி ஒரு சிலர் தான் அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்படுகிறார்கள்.
கண்ணதாசன், வாலி, வைரமுத்து என தொடர்ந்து தனது வரிகளின் மூலம் வாழ்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் எல்லோராலும் கொண்டாடப்பட்டவர், நா.முத்துக்குமார். காஞ்சிபுரத்தில் பிறந்த இந்த பாட்டுத் தலைவனின் வரிகளுக்கு மயங்காத, கலங்காத உள்ளங்கள் இல்லவே இல்லை. காதல், சோகம், ஏக்கம், கொண்டாட்டம், துரோகம், மழை, வெயில் என அத்தனை உணர்வுகளுக்கும் பாடல் எழுதியவர்.
அன்னையை போற்றிக் கொண்டு இருந்த சினிமாவில் தந்தையின் அருமையைப் பாடலில் சொன்னவர். மழையை கொண்டாடி தீர்த்தவர்கள் மத்தியில் 'வெயில்' அழகு என்றார். முத்துக்குமாரின் தந்தை ஒரு தமிழாசிரியர் என்பதால் வீடு முழுவதும் புத்தகங்களால் நிறைந்து கிடக்கும். ஒரு நூலகமே வைத்திருந்தார். சிறு வயதிலேயே அம்மாவும் இறந்துவிட, இயல்பிலேயே புத்தகங்கள் தான் அவரை அரவணைத்துக் கொண்டது.
இலக்கியம், கவிதை என படித்துக் கற்றறிந்தார். சென்னையில் தமிழ் இலக்கியமும் படித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பாடகராக உருமாறினார். இவரது பாடல்களில் தனித்துவமும் இலக்கியத்தை சாமானியனுக்கும் புரிகின்ற மாதிரி பாடல் வரிகளில் கொடுத்திருப்பார். இவரால் சலாம் குலாமும் எழுத முடியும்; அதே நேரத்தில் திருநெல்வேலி அல்வா டா என்றும் எழுத முடியும்.
அதே நேரத்தில் பறவையே எங்கு இருக்கிறாய், ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்று எழுத முடியும் என்றாலும் அப்போதும் நா.முத்துக்குமார் தான் நினைவுக்கு வருவார். மெட்டுக்குள் அழகாக வரிகளை கோர்ப்பதில் எப்போதுமே இவர் வித்தகர். 'வெயில்' படத்தில் வெயிலோடு விளையாடி என்ற பாடலில் சிறு வயதில் நாம் விளையாடிய அத்தனை விளையாட்டுகளையும் நம்மை உணர வைத்திருப்பார்.
செல்போன் இல்லாத அக்காலத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டிற்கே போகாமல் விளையாடி திரிந்த அந்த நாட்கள் குறித்து இப்படி எழுதியிருப்பார். ''பசி வந்தா குருவி முட்டை, தண்ணிக்கு தேவன் குட்டை, பறிப்போமே சோளத்தட்டை, புழுதிதான் நம்ம சட்டை''இதை விட நமது பால்யத்தின் சுவடுகளை யாரால் ஞாபகப்படுத்த முடியும்.
காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் பாடலில் கல்லறை மீது தான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா... மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்... நம் காதல் தடைகளை தாங்கும் என்று காதலின் வலிக்கு தனது வரிகளால் மருந்து தடவி இருப்பார், முத்துக்குமார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஆட்டம் போட வைக்கும் பாடல்களே அதிகம் அவர் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் அதிலும் பல புதுமைகளை புகுத்தி அழகான வரிகளால் அந்தப் பாடல்களையும் ரசிக்கும்படி வைத்திருப்பார்.