சென்னை:மெலோடி பாடல்களின் மூலம் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் இசை அமைப்பாளர் வித்யாசாகர். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் எல்லா முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசை அமைத்தவர். இவரது பாடல்களை கேட்காத காதுகளே இல்லை எனலாம். மெலோடி, குத்து என எல்லா வெரைட்டியிலும் கலக்கியவர். கில்லி, சந்திரமுகி போன்ற படங்களில் இவரது இசை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
இவர் நேற்று (மார்ச்.2) தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதோடு திரைத்துறையிலும் 34 ஆண்டுகளை நிறைவு செய்தார். அதுமட்டுமின்றி முதல்முறையாக இசை நிகழ்ச்சியும் நடத்துகிறார். அதனை ஒட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டார். இந்த சந்திப்பிற்கு முன்னதாக கேக் வெட்டி தனது பிறந்த நாளை இசையமைப்பாளர் வித்யாசாகர் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இசையமைப்பாளர் வித்யாசாகர், "நான் இத்தனை ஆண்டுகள் இசையமைப்பாளராக இருந்தும் தமிழ்நாட்டில் இதுவரை ஒரு இசை நிகழ்ச்சி கூட நடத்தவில்லை. இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இசை விருந்தாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே நேரத்தில் மலையாளத்திலும் எந்த இசை நிகழ்ச்சி செய்யவில்லை.
தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்த உள்ளோம். நான், முதலில் இசை நிகழ்ச்சி நடத்துவது ஸ்பெஷல் தான். அதிலும் நீங்கள் பார்க்க வருவது இன்னும் ஸ்பெஷல். இந்த இசை நிகழ்ச்சி எப்போது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இடம் உறுதி செய்துவிட்ட பின்னர் தேதி அறிவிக்கப்படும். மக்கள் திரண்டு வந்து பார்க்க வேண்டும் என்பதே முக்கியம்.