இந்தியத் திரை உலகின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர், ராஜமௌலி. மகதீரா(மாவீரன்), நான் ஈ உள்ளிட்ட படங்களின் மூலம் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த இயக்குநர் ராஜமௌலி, பாகுபலியை இயக்கியதன் மூலம், சர்வதேச அளவில் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம், சிறந்த இசையமைப்புக்கான ஆஸ்கர் விருதையும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
சரித்திர கால கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் தற்போது அதிக அளவில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகின்றன. ஆனால், அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர், ராஜமௌலி. இயக்குநர் மணிரத்னம்கூட, "பாகுபலி வரவில்லை என்றால் என்னால், பொன்னியின் செல்வனை செய்திருக்கமுடியாது'' என ஒரு பேட்டியில் ராஜமௌலியை புகழ்ந்திருந்தது ஞாபகம் இருக்கலாம்...
இயக்குநர் ராஜமௌலி, ஆந்திர மாநிலத்தில் பிறந்து இருந்தாலும், தனக்கு சினிமாவை கற்றுத்தந்தது தமிழ்நாடு தான் என்று அவரே பல பேட்டிகளில் கூறி உள்ளார். அந்த அளவிற்கு, அவருக்கு தமிழ் நாட்டின் மீது தனி மதிப்பும் மரியாதையும் இருந்து வந்தது. இயக்குநர் ராஜமௌலி, தமிழ்நாட்டை சாலை மார்க்கமாக சுற்றிப்பார்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு வந்ததாகவும், அந்த ஆசை தற்போது ஒருவழியாக நிறைவேறி உள்ளதாகவும், ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். அவரின் அந்த ட்விட்டர் பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு வார கால அளவிற்கு, குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா சென்ற ராஜமௌலி, அதுகுறித்த கிளிம்ப்ஸ் வீடியோவை பதிவிட்டு, அந்த சுற்றுலா குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.