சென்னை:நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர், மனோபாலா. 1982ஆம் ஆண்டு வெளியான 'ஆகாய கங்கை' திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா அடுத்தடுத்து பல படங்களை இயக்கியுள்ளார். இதுவரையில் 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இது தவிர 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மனோபாலா ஒரு சிறந்த வீணை வாசிப்பாளரும் கூட. பாரதிராஜாவின் 'புதிய வார்ப்புகள்' படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தார், மனோபாலா.‘பரமக்குடியாரே’ என்றுதான் கமல்ஹாசனை பாரதிராஜா இப்போதும் அழைப்பார். "பரமக்குடியார் சொன்னா மறுக்கவா போறேன், என்று கமலுக்காக சேர்த்துக்கொண்டார் பாரதிராஜா சார்’’ என்று மலரும் நினைவுகளை மறக்காமல் சொன்னார் மனோபாலா.
உதவி இயக்குநராக இருக்கும்போதே மனோபாலாவின் சாமர்த்தியம், பக்குவம், தடக்கென்று எடுக்கிற முடிவு எல்லாமே அவருக்கு பின்னாளில் ரொம்பவே பயன்பட்டது. ‘கிழக்கே போகும் ரயில்’, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ என வரிசையாகப் படங்களில் பணியாற்றினார். பின்னர் கார்த்திக்கையும் சுஹாசினியையும் வைத்து ‘ஆகாயகங்கை’ படத்தை முதன்முதலாக இயக்கினார். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாமே அருமையாக அமைந்தன. ஆனால், படம் ஏனோ பெரிதாகப் போகவில்லை.
அதன்பிறகு பல வருடங்களுக்குப் பிறகு, மோகனை வைத்து 'பிள்ளை நிலா' படத்தை இயக்கினார். பின்னர் ரஜினிகாந்த் நடித்த 'ஊர்க்காவலன்' படத்தை இயக்கினார். விஜயகாந்தை வைத்து ‘சிறைப்பறவை’, ’என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்’ படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு ’மூடு மந்திரம்’, ‘வெற்றிப்படிகள்’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘செண்பகத்தோட்டம்’ என்று வரிசையாகப் படங்களை இயக்கினார் மனோபாலா. பின்னர் நிறைய தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். அங்கேயும் தனி முத்திரை பதித்தார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'நட்புக்காக' என்ற படத்தில் முதல்முறையாக நடித்தார். இதுகுறித்து மனோபாலா ஒருமுறை கூறும்போது, "நட்புக்காக படத்தை அடுத்து 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இயக்குநராக இருந்தபோது கிடைத்த புகழைவிட, ஒரு நடிகனாக இன்றைக்கு இருக்கிற சிறுவர், சிறுமிகள் எல்லோரும் என்னை எங்கு பார்த்தாலும் சூழ்ந்துகொண்டு என்னோடு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் கே.எஸ்.ரவிகுமாருக்கு நன்றி சொல்லணும். கமலுக்கும் பாரதிராஜாவுக்கும் நன்றி சொல்லணும்’’ என்று மனம் உருகி சொன்னார், மனோபாலா.
மனோபாலா மறைவுக்கு திரைப்பிரலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில்,"பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என தனது இரங்கலைப் பதிவிட்டுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.