தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கமலின் மலேசிய நிகழ்ச்சியில் ரசிகர்கள் அவமதிப்பு - மன்னிப்புகேட்ட விழா ஏற்பாட்டு நிறுவனம்!

சமீபத்தில் மலேசியாவில் நடந்தேறிய கமலின் ’விக்ரம்’ புரொமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர்கள் அவமதிக்கப்பட்டதற்கு அந்த விழா ஏற்பாட்டு நிறுவனம் மன்னிப்புக்கேட்டுள்ளது.

கமலின் மலேசிய நிகழ்ச்சியில் ரசிகர்கள் அவமதிப்பு - மன்னிப்பு கேட்ட விழா ஏற்பாட்டு நிறுவனம்!
கமலின் மலேசிய நிகழ்ச்சியில் ரசிகர்கள் அவமதிப்பு - மன்னிப்பு கேட்ட விழா ஏற்பாட்டு நிறுவனம்!

By

Published : Jun 1, 2022, 8:33 PM IST

கமலின் விக்ரம் பட புரொமோசனுக்காக கோலாலம்பூரில் ’பிரிக்பீல்ட்ஸ்’ என்ற இடத்தில் உள்ள ஒரு பிரபல ஷாப்பிங் மாலில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 2 மணிக்கு கமல்ஹாசன் செய்தியாளர்களையும், ரசிகர்களையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக வெளியூர்களிலிருந்து எல்லாம் வந்த கமல் ரசிகர்கள் அதிகாலை முதல் அந்த ஷாப்பிங் மாலில் குவியத் தொடங்கினர். மதியம் 2 மணிக்கெல்லாம் 6 அடுக்குகள் கொண்ட அந்த ஷாப்பிங் மால் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

ஆனால், 2 மணிக்கு வர வேண்டிய கமலோ மாலை 6 மணிக்கு வந்திருக்கிறார். அதுவரை கலை நிகழ்ச்சி அது இதுவென்று அங்கு கூடியிருந்த ரசிகர்களை வைத்தே ஒப்பேற்றியிருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் மிகவும் அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்தனர். பின்னர் சோஷியல் மீடியாக்களில் அது குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பத்தொடங்கினர்.

செய்தியாளர்களுக்கு அதிர்ச்சி: ஒருபுறம் ரசிகர்களுக்கு இந்நிலை என்றால், அங்கு கூடியிருந்த பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கோ மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சுமார் அரை மணி நேரம் மட்டுமே மேடையில் இருந்த கமலிடம், மூன்று கேள்விகளை மட்டுமே கேட்க அனுமதியளிக்கப்பட்டதாம். இதனால் செய்தியாளர்கள் மத்தியிலும் மிகுந்த அதிருப்தி நிலவியது. கிட்டத்தட்ட ஒருநாளை இதற்காக செலவு செய்த செய்தியாளர்கள், அரை மணி நேரம் மட்டுமே கமலை சந்தித்தனர்.

அதிலும், விழா மேடையிலிருந்து சற்று தூரத்திலேயே அமர வைக்கப்பட்டனர். இதனிடையே, மலேசியக் கலைஞர்களில் ஒருவரான லிஜண்ட் கௌதன் என்பவர் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில், ’கமலுக்குப் பாதுகாப்பிற்காக வந்த பாதுகாவலர்கள் ரசிகர்களை அண்டவிடாமல் கடுமையாக நடந்து கொண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில், "உங்கள் கடமையை நீங்கள் செய்கிறீர்கள் சரி. ஆனால், அவர்கள் என்ன பயங்கரவாதிகளா? அவர்கள் ரசிகர்கள். அதிகாலை முதல் கால்கடுக்க கமல் முகத்தைப் பார்த்துவிடக் காத்திருந்தனர். அவர்களிடம் நீங்கள் அப்படி நடந்து கொள்ளக்கூடாது. கமலை யாரிடமிருந்து பாதுகாக்கப்பார்க்கிறீர்கள். இந்த ரசிகர்கள் இல்லையென்றால் அவர் இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ’டிஎம்ஒய்’, தாமதத்திற்கு மிகுந்த மன்னிப்புக்கேட்டு அறிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ள அந்நிறுவனத் தலைவர் டிஎம்ஒய், ரசிகர்களைச் சந்திக்க கமல் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார் என்றும், ஆனால், சில தரப்பினர் இந்நிகழ்ச்சி நடக்கக் கூடாது என கொடுத்த சில நெருக்கடிகளால் கமல் வரத் தாமதம் ஏற்பட்டுவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.

கமலின் மலேசிய நிகழ்ச்சியில் ரசிகர்கள் அவமதிப்பு - மன்னிப்பு கேட்ட விழா ஏற்பாட்டு நிறுவனம்!

மேலும், பாதுகாப்புக் கருதி வணிக வளாக நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில், கமல் பின்பக்கமாக அழைத்து வரப்பட்டார் என்றும்; டிஎம்ஒய் நிறுவன அலுவலர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

இதையும் படிங்க: சித்து மூஸ்வாலா கொலை: சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details