தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்" - பாரதிராஜா - Bharathiraja films

இந்த ஒரு ஜென்மம் அல்ல ஏழேழு ஜென்மம் கிடைத்தாலும் சினிமாக்காரனாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று இயக்குநர் பாரதிராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன் - பாரதிராஜா நெகிழ்ச்சி!
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன் - பாரதிராஜா நெகிழ்ச்சி!

By

Published : Jul 30, 2022, 6:13 PM IST

சென்னையில் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, "பல வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளர்கள் சினிமா மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்த காலத்தில் விமர்சனம் செய்வதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திட்டாமல், மனம் நோகாமல் விமர்சனம் செய்வதை இக்கால தலைமுறையினர் கடைபிடிக்கின்றனர். இதற்காக நன்றியை தெரிவிக்கிறேன்.

நான் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், நட்பாக பாசமாக கலந்து கொண்டது இந்நிகழ்ச்சியில்தான். இதில் பல முகங்களை 40 வருடங்களுக்கும் மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகள் டெல்லி, மும்பை என்று பார்த்துவிட்டேன். ஆனால், ஊடகங்கள் என்னை அழைத்து பாராட்டுவது நினைக்கும் போது நான் பாக்கியமாக கருதுகிறேன்.

நெகிழ்ச்சியில் இருக்கும் போது வார்த்தைகள் வசப்படாது. அப்படியான ஒரு தருணத்தில் தான் இப்போது இருக்கிறேன். அப்போதிருந்த பாரதிராஜா வேறு இப்போது இருக்கும் பாரதிராஜா வேறு. இப்போது பொறுமையும் பக்குவமும் அதிகரித்துவிட்டது. இப்போது இருக்கும் இளைஞர்கள் மிகச்சரியாக கணித்து விமர்சனங்களை செய்கின்றனர்.

அந்த அளவிற்கு பக்குவ நிலை அவர்களிடம் உள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கு நான்கே படங்களில் நான்கு திசைகளையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். ’விக்ரம்’ படம் பார்த்துவிட்டு அவருக்கு அழைத்து பேசினேன். அவரைப் பார்த்தது கூட இல்லை ’விக்ரம்’ படத்திற்கு பிறகு தான் அவருடைய முந்தைய படங்களை பற்றி தெரிந்து கொண்டேன்.

ஏராளமான கனவுகள் கற்பனைகள் உடன் வந்த லோகேஷ் கனகராஜிடம் மிகப்பெரிய கலை ஞானம் உள்ளது. கமல் ஒரு அற்புதமான கலைஞர் சினிமாவிற்காக பல விஷயங்களை இழந்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு இப்படி ஒரு படம் தான் இதுவரை இழந்த அத்தனையையும் முதலீடாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. இதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ்தான். நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு படங்களுக்கான கதைகள் எழுதி முடித்து விட்டேன்.

லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குநர்களுடன் சேர்ந்து ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் எப்போதும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவிற்குள் வரவில்லையென்றால் எங்கேயோ தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி கொண்டோ அல்லது விவசாயம் செய்து கொண்டோ சக மனிதனாக வாழ்ந்து போய் சேர்ந்திருப்பேன்.

ஆனால் சினிமா என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இந்த ஒரு ஜென்மம் அல்ல ஏழேழு ஜென்மம் கிடைத்தாலும் சினிமாக்காரனாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை " என்றார்.

இதையும் படிங்க:பிருந்தா மாஸ்டரின் ‘தக்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details