பாடகர்கள் தீ, 'தெருக்குரல்' அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோரின் கூட்டணியில் இண்டிபெண்டென்ட் ஆல்பமாக உருவான ”என்ஜாயி எஞ்சாமி” பாடல் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியானது.
தொடர்ந்து சமூகப்பிரச்னைகள் குறித்து பாடி வந்த அறிவின் இந்தப் பாடலிலும் ஆதித்தமிழர்கள், இயற்கை வளம், முன்னோர்களின் வாழ்வியல் குறித்து பாடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப்பாடல் உலக அளவில் பெரும் ஹிட் அடித்தது.
”என்ஜாயி எஞ்சாமி” பாடல் வெளியான சில நாட்களிலேயே பட்டிதொட்டி எங்கும் பரவத்தொடங்கியது. இண்டிபெண்டென்ட் இசையமைப்பாளர்களுக்கென ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய 'மாஜா' தளத்தில் வெளியானது. இந்தப்பாடல் தற்பொழுது வரை யூ-ட்யூபில் 429 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
பா.ரஞ்சித் ட்வீட்:"என்ஜாயி எஞ்சாமி" பாடல் போலவே இண்டிபெண்டென்ட் ஆல்பமாக வெளியான ’நீயே ஒளி’ பாடலும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில், இந்த இரண்டு பாடல்கள் குறித்து, ரோலிங் ஸ்டோன் பத்திரிகை கவர் ஸ்டோரி ஒன்றை உருவாக்கியது.
இதற்காகப் பாடகி தீ, ’நீயே ஒளி’ பாடலில் இடம்பெற்றுள்ள ராப் பாடகர் ஷான் வின்சென்ட் டி பால் ஆகியோரிடம் பேட்டி எடுத்து, கவர் ஸ்டோரியில் அவர்களது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு முக்கியக்காரணமாக இருந்த 'தெருக்குரல்' அறிவின் படம் இடம்பெறாமல் இருந்தது சர்ச்சையைக்கிளப்பியது. இதுகுறித்து அறிவு ஒதுக்கப்படுகிறார் என பா. ரஞ்சித் ட்வீட் செய்தார். அதில், "என்சாயி எஞ்சாமி, நீயே ஒளி பாடல் எழுதி பாடிய தெருக்குரல் அறிவு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளார். ரோலிங் ஸ்டோன் இந்தியா ஏன் இப்படிச்செய்கிறது" எனக் கேள்வி எழுப்பினார்.
செஸ் ஒலிம்பியாட் சர்ச்சை: இதுமட்டுமின்றி ஸ்பாடிஃபை சார்பில், புகழ்பெற்ற டிஜே-வான டிஜே ஸ்னேக் குரலில் 'என்ஜாயி எஞ்சாமி' பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிடப்போவதாக அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பிலும் அறிவின் பெயர் இடம்பெறவில்லை. டிஜே ஸ்னேக் மற்றும் தீ-யின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றன.
மேலும், இதற்காக நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் திரையிடப்பட்ட விளம்பரத்திலும் அறிவு இன்றி, டிஜே ஸ்னேக் மற்றும் தீ-யின் படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்த விளம்பரமும் பேசுபொருளாக ஆனது.
இதனைத்தொடர்ந்து தற்போது இறுதியாக, சில நாட்களுக்கு முன் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ’என்ஜாயி எஞ்சாமி’ பாடலை பாடகி தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் ஆகியோர் பாடினர். இதிலும் தெருக்குரல் அறிவு ஒதுக்கப்பட்டாரா எனக்கேள்விகள் எழத்தொடங்கின.