பிரபல நடிகை கனகா வீட்டில் தீ விபத்து! சென்னை: தமிழ் சினிமாவில் 80-களில் கரகாட்டக்காரன், அதிசயப் பிறவி உட்பட பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தவர் கனகா. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முதலாவது மெயின் ரோட்டில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலை பூஜை அறையில் கனகா யாகம் வளர்த்துக் கொண்டிருந்த நிலையில் விளக்கேற்றும் போது, திடீரென தீப்பொறி கிளம்பி அங்கிருந்த துணியில் தீப்பிடித்தது. உடனே தீயானது பரவியதால் அருகிலிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது, வீட்டிலிருந்த துணிமணிகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்க முற்பட்டபோது பூஜை அறையினுள் யாகம் வளர்ப்பதாகக் கூறி, நடிகை கனகா யாரையும் உள்ளே அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் நடிகை கனகாவை சமாதானப்படுத்திய பின்பு, உள்ளே சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். துணிமணிகள் எரிந்ததைத் தவிர, வேறு எந்தப் பாதிப்பும் நிகழவில்லை. எனவே, இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:Exclusive: உடல்நலம் குறித்த வதந்தி - விளக்கமளித்த நடிகர் விஜயகுமார்