சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இயக்குனராக உருவாகியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரது அடுத்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் கௌதம் மேனன், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் அங்கு படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
அதில் விஜய் பேசிய பிளடி ஸ்வீட் என்ற வசனம் பிரபலமானது. விக்ரம் படத்தை போலவே வெளியிடப்பட்ட இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இணையுமா என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.