சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் வகையில் இருக்கும். ரஜினி படங்களின் வசூலைக்கூட இவரது படங்கள் முறியடித்த வரலாறு உண்டு. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் நேற்று வெளியானது.
இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார். அது மட்டுமின்றி ஹாலிவுட் சினிமாவில் வருவது போல் தனக்கென ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாதி மோசமான திரைக்கதையுடன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது. ஆனால் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நடுநிலை ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்குமா என்பது சந்தேகமே.
இந்த நிலையில் மற்றொரு விஷயமும் சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அது நடிகர் விஜய்க்கு மிருக தோஷம் இருக்கிறது என்றும், அதனால் மிருகங்களின் பெயரை தலைப்பாக வைத்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இது குறித்து நிறைய மீம்ஸ்களும் உலா வருகின்றன. அப்படி விஜய் நடித்து மிருகங்கள் பெயரை படத்தின் தலைப்பாக வைத்து விமர்சனங்களை பெற்ற படங்களை பற்றி பார்க்கலாம்.
குருவி
இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் நடித்து மிகப் பெரிய ஹிட்டடித்த படம் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்கான கில்லி, தமிழில் விஜயின் திரை வாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் தரணி, விஜய், த்ரிஷா கூட்டணி 2008ஆம் ஆண்டு குருவி படத்தில் இணைந்தது. குருவி படம் மூலம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பாளராக தங்களது திரை வாழ்வை தொடங்கியது. ஆனால் குருவி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மோசமான திரைக்கதையால் தோல்விப் படமாக அமைந்தது.
சுறா
இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுறா. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். ஆனால் சுறா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. விஜய் ரசிகர்கள் மறக்க வேண்டிய படமாகவும் இது அமைந்தது. இது நடிகர் விஜய்க்கு 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.