தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இசை வெளியீட்டு விழாவில் சமூக நீதி சிந்தனைகளை பேச வேண்டாம் - இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்

இசை வெளியீட்டு விழாவிற்கு வருபவர்கள் இசை தொடர்பாகவும், படம் சம்பதப்பட்ட விஷயங்கள் பற்றி மட்டும் பேசவும் தங்கள் சமூக நீதி சிந்தனைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும் என இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறினார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 19, 2023, 1:36 PM IST

சென்னை: ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் T. குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான் விஜய், பருத்தி வீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன், சரவண சக்தி நடிகர்கள் அப்புக்குட்டி, ஜீவா, ரோபோ சங்கர், பிரஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும் போது, "கும்பாரி என்பதன் அர்த்தம் எனக்கு முதலில் புரியவில்லை. இங்கே வந்த பிறகு தான் கும்பாரி என்றால் நட்பு என அர்த்தம் இருப்பது தெரியவந்தது. மற்ற எந்த உறவுகளும் பந்தத்தோடு தொடர்பு கொண்டது. நட்பு மட்டும் தான் எந்தவித பந்தமும் இல்லாமல் வரக்கூடியது' என்று கூறினார்.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும் போது, "இந்த படத்தின் பாடல்களை பார்த்து விட்டு பிறகு ட்ரெய்லரை பார்க்கும் போது ஒவ்வொரு காட்சியையும் தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது. இந்த படத்தின் நாயகன் விஜய் விஷ்வா மட்டுமல்லாமல் இனிகோ பிரபாகர், சௌந்தரராஜன் என எல்லோருமே என்னுடன் அடிக்கடி விவாதத்தில் இருப்பவர்கள் தான்.

இவர்கள் போன்ற இளம் நடிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்களை தேடி வரும் வாய்ப்பை தயவுசெய்து மிஸ் பண்ணாதீர்கள். உங்கள் முகத்தை மக்களிடம் பதிவு செய்து கொண்டே இருந்தால் தான் மக்கள் உங்களை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நடிகர் விக்ரம் 16 வருட போராட்டத்திற்கு பிறகு தான் சேது என்கிற படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றார்.

உங்களுக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு சேது திரைப்படம் அமையும். இது போன்று இசை வெளியீட்டு விழாவிற்கு வருபவர்கள் இசை தொடர்பாகவும் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டுமே பேசினால் அந்த கலைஞர்களை பற்றி வெளியே தெரியும்.

அதை தவிர்த்து சமூக நீதி போராளிகளாக பொதுவுடைமை சிந்தனை கொண்டவர்களாக தங்களை காட்டிக் கொள்வதற்கு சில பேர் இது போன்ற விழாக்களை பயன்படுத்துகிறார்கள். அதற்கு வேறு மேடைகள் இருக்கின்றன. அங்கே உங்களுடைய சமூக நீதி கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசும் போது, "படத்தின் நாயகன் விஜய் விஷ்வாவுடன் எனக்கு பல வருட நட்பு உண்டு. இருவரும் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் டூரிங் டாக்கீஸ் என்கிற படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓகே செய்து நடித்த விஜய் விஷ்வா, பாடல் காட்சிகளில் குறிப்பாக கதாநாயகியுடனான நீச்சல் குளம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அதிக டேக்குகள் வாங்கினார். இங்கே இந்த படத்திலும் அப்படி ஒரு பாடல் காட்சியை பார்த்தேன். ஆனால் நீங்கள் ஒரே நாளில் இந்த காட்சியை படமாக்கி உள்ளீர்கள் என்று கூறும்போது ஆச்சரியமாக இருந்தது" என்று கூறினார்.

நாயகன் விஜய் விஷ்வா பேசும் போது, ”இந்த படத்தின் கதை கடலும் கடல் சார்ந்தும் உருவாகியுள்ளது. 25 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை ரொம்ப வேகமாகவே முடித்து விட்டோம். படத்தின் தயாரிப்பாளர் பட்ஜெட் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஆரம்பத்திலேயே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார்.

இப்போது தரைப்படை, பிளாஷ்பேக், பிரம்ம முகூர்த்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். வாய்ப்புகள் நன்றாகவே கிடைக்கிறது. ஆனால் இதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பயமும் இருக்கிறது" என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும் போது, ”சமீபகாலமாக நட்பு பற்றி படம் எடுப்பது என்பதே குறைந்து வருகிறது. காரணம் நட்பே குறைந்து வருவது போல இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் நட்பை முன்னிலைப்படுத்தி படம் எடுத்துள்ளது பாராட்டுக்குரியது. இந்த விழா சற்று தாமதமாக ஆரம்பித்ததால் பசி எடுத்தது உண்மை தான்.

அதே சமயம் இங்கே திரையிடப்பட்ட பாடல் காட்சிகளில் முத்தக் காட்சியை பார்த்ததும் பாதி பசி பறந்து விட்டது. இந்த விழா மேடையில் நாயகியின் அருகில் அமர எனக்கு இடம் கிடைத்ததும் மொத்த பசியும் போய்விட்டது. அதனால் தான் இந்த விழாவில் பாக்யராஜ் முதலில் பேசுவதாக கூறி கிளம்பி சென்றாலும் நான் கடைசி வரை இந்த நிகழ்வில் இருக்கிறேன் என்று உட்கார்ந்து விட்டேன்.

இந்த படத்தில் இரண்டு கதாநாயகர்களுக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. படத்தின் நாயகி பேசும் போது இசையமைப்பாளர்களின் பெயர்கள் பற்றி தெரியவில்லை என்று கூறினார். அவர்கள் இசையமைத்த பாடல்களில் தான் நீங்கள் சினிமாவில் முகம் காட்டி பிரபலமாகிறீர்கள். நிச்சயம் அவர்களின் பெயரை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்”. என்றார்.

இதையும் படிங்க: Raghuvaran b.tech: ரகுவரனாக கம்பேக் கொடுத்த தனுஷ்... ரசிகர்கள் கொண்டாட்டம்!!

ABOUT THE AUTHOR

...view details