வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன், இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேசன், நடிகர் நீரஜ் மாதவ், எடிட்டர் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் ஜெயமோகன் பேசியது, நான் கோவையில் இருப்பதால் வெற்றி விழாவில் நேரில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இப்படம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டது. உணர்ச்சி கொந்தளிப்புடன் வேகமான திரைக்கதையுடன் சொல்லியுள்ளோம். ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் தங்களை உணர்ந்து இதில் நடித்துள்ளனர்.
இது சிம்புவின் படம். கிராமத்து மனிதனின் இருந்து அசுரனாக மாறியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானவர் ஏ.ஆர்.ரகுமான். இந்த வெற்றி தொடரும். அடுத்த பாகத்தை இன்னும் அழுத்தமாக ஆழமாக உருவாக்குவோம் என்றார்.
இயக்குநர் கௌதம் மேனன் பேசியது, தூங்கிட்டு வாங்க அப்படிணு சொன்னதை சமூக வலைத்தளங்களில் பெரிதாக போட்டுவிட்டனர். எனது மற்ற படங்களை விட இந்த படத்திற்கு அதிகமான நல்ல விமர்சனம் வந்துள்ளது. நெகடிவ் விமர்சனத்திற்கும் நன்றி. கற்றுக்கொள்ள முடிகிறது.
ஒருசில ரிவியூக்கள் அடுத்தவர் பிழைப்பில் மண் அள்ளிப்போடுவது மாதிரி இருக்கும். ஒரு படம் பண்ணுவது மிகவும் கடினமானது. படத்தை வெற்றிபெற வைத்தவர்களுக்கு நன்றி. சிம்புவுக்கு நன்றி. மல்லிப்பூ பாட்டு உருவாக ஏ.ஆர்.ரகுமான் தான் காரணம். சிம்பு நான் எது கொண்டு வந்தாலும் ஏற்றுக்கொண்டார். கரோனா நேரத்தில் ஒரு சிறிய படம் எடுக்கலாம் என்றேன். பிறகு வேறு ஒரு படம் சொன்னேன். இப்போது இந்த படம் எல்லாவற்றிற்கும் சரி என்றார். கேமராமுன் நடிப்பது அவ்வளவு சுலபமல்ல என கூறினார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பேசுகையில், இப்படம் பம்பர் ஹிட். தயாரிப்பாளர் நான் சொல்கிறேன். எல்லா ஊர்களிலும் இப்படம் வெற்றி பெற்றுள்ளது. சிம்பு இப்படத்தில் முத்துவாகவே வாழ்ந்துள்ளார். இப்படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதி விருது சிம்புவுக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு தகுதியானவர் சிம்பு. சினிமாவில் சென்டிமென்ட் வேண்டாம். கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். இரண்டாம் பாகம் நிச்சயம் இருக்கிறது.
நடிகர் சிலம்பரசன் கூறியது, “ரெகுலர் கமர்ஷியல் படங்களுக்கு உண்டான எதுவுமே இதில் இல்லை. இப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. முதல்முறையாக ஒருநாள் முன்னாடியே படத்தோட கேடிஎம் கிடைத்தது. இது எல்லாம் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த உலகத்தில் தான் வாழ்கிறோமா என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவ்வளவு வலியை கடந்து வந்துள்ளேன்.
சினிமாவில் வருவது போல் எனது வாழ்க்கையிலும் நடந்துள்ளது. சிம்பு உடலை குறைத்தார், நன்றாக நடித்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள் ஆனால் இப்படத்தில் என்னைத்தான் வைத்து செய்தார்கள். நிறைய காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டன. இப்படத்தின் மேக்கிங் வீடியோ பார்த்தால் தெரியும். எனது நடிப்பை ஜெயமோகன் பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. எனது நடிப்புக்கு இதில் அதிக பாராட்டு வந்தது நம்பிக்கை கொடுத்துள்ளது.
இன்னும் வித்தியாசமான படங்கள் பண்ண வேண்டும். எனக்கு பிடித்த பாட்டும் மல்லிப்பூதான். இப்படம் குறித்து எனக்கு ஒரு பயம் இருந்தது. தட்டிவிட நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக் கொடுக்க ஆட்கள் இல்லை. இரண்டாம் பாகத்தில் எனது ரசிகர்களுக்காக நிறைய ஆக்ஷன் காட்சிகள் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது கேங்ஸ்டர் படம் கிடையாது எப்படி கேங்ஸ்டர் ஆகிறான் என்பதே முதல் பாகம்.
யாரையும் உருவத்தை வைத்து விமர்சிக்காதீர்கள் - நடிகர் சிலம்பரசன் இப்படத்தில் என் உடம்பை வைத்து ஒன்றுமே எழுத முடியாது. அந்த சில பேருக்கு சொல்கிறேன். ஒரு படத்தை விமர்சிக்கலாம். தனிப்பட்ட மனிதனை அவரது உருவத்தை வைத்து விமர்சனம் செய்வது மிகவும் தவறு அவ்வாறு தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்காதீர்கள்” என்றார்.
இதையும் படிங்க: 'இதனால் தான் பொன்னியின் செல்வனில் ரஜினியை நடிக்கவைக்கவில்லை!' - மணிரத்னம்