சென்னை:பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி-2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தரமணியில் நடைபெற்றது. அதில் இயக்குநர் பி.வாசு, நடிகர் ராகவா லாரன்ஸ், ரவி மரியா, நடிகைகள் கங்கனா ரனாவத், சுபிக்ஷா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர்.
அப்போது பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “சந்திரமுகி 2 படத்தில் நடித்ததைப் பெருமையாக நினைக்கிறேன். கங்கனா இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய பலம். யார் சந்திரமுகி என ஆர்வம் இருந்தது. கடைசியில் கங்கனா என்றதும் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
நான்கு முறை தேசிய விருது வாங்கியவர், இதில் சிறப்பாக நடித்துள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாக நினைத்து நடித்திருப்பார், இந்த இரண்டாம் பாகத்தில் ஒரிஜினல் சந்திரமுகியாக நடித்துள்ளார் கங்கனா. எனவே இருவரையும் ஒப்பீடு செய்ய வேண்டாம். சந்திரமுகி எப்படி இருப்பார் என்பதை இதில் பார்ப்பீர்கள்.
சந்திரமுகி படத்தின் 2-ம் பாகம் உருவாக்க போகிறோம் என்று ரஜினியிடம் கூறியதும் வாழ்த்து தெரிவித்தார். வேட்டையன் கெட்டப் போட்டதுமே ஒரு பயம் வந்து விட்டது. அப்போது ரஜினிக்கு தொலைபேசியில் அழைத்து பேசினேன். அவரை தலைவர் என்று சொல்வதை விட குரு என்று தான் கூறுவேன்.
ரஜினிகாந்த்தின் ஆசீர்வாதம் இந்த படத்துக்கு இருப்பதாகவும், படம் நன்றாக அமைய வேண்டும், அனைத்து ரசிகர்களும் வந்து பார்க்க வேண்டும், அதற்கு இயக்குநர் கூறுவதைப் பண்ணினால் போதும். இந்த படத்தில் எந்த வெற்றி கிடைத்தாலும் பி.வாசுவின் பாதத்துக்கு தான் செல்லும்” என்று பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் பி.வாசு, “சந்திரமுகி முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு இடையில் ஒரு சின்ன கனெக்ட் உள்ளதாகவும், மக்கள் அதைப் பார்த்து பாராட்டுவார்கள் என நம்புவதாகவும் கூறினார். மேலும் இந்த இரண்டாம் பாகத்தின் கதைக்காகப் பலரிடம் கலந்து ஆலோசித்துள்ளதாகவும், குறிப்பாக ராகவா லாரன்ஸ் பல ஆலோசனைகள் வழங்கியதாகவும் தெரிவித்தார். படம் கட்டாயம் உங்களை ஆச்சரியப்படுத்தும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், சந்திரமுகியாக யாரை நடிக்க வைக்கலாம் என தேடும்பொழுது, கங்கனாவே நடிக்க ஆர்வமாக இருந்தார். அவரது ஆர்வம் எங்களுக்கு உதவியது. பலர் ரஜினி கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் எப்படி நடித்துள்ளார் எனக் கேட்கின்றனர். ஆனால் அவருடைய கதாபாத்திரம் இது கிடையாது. சந்திரமுகி 1 படத்தில் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கவில்லை" என்று படத்தின் இயக்குநர் பி.வாசு தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனோஜ் பாரதிராஜா படத்தில் மீண்டும் இணையும் பாரதிராஜா - இளையராஜா கூட்டணி!