தீபாவளி பண்டிகைக்கு இனிக்க இனிக்க பலகாரங்களும், இன்பம் பெருக உறவினர்களும், நண்பர்களும் கூடி பட்டாசு வெடித்து மகிழ்ந்தாலும் சினிமா பிரியர்களுக்குப் புதுப்படம் பார்க்காமல் பண்டிகை முழுமை பெறாது எனலாம். பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் தன்னுடைய ஆஸ்தான நடிகரின் படத்திற்குச் சென்றால் மட்டுமே ஆட்டம் பாட்டத்துடன் அந்த பண்டிகை களைக்கட்டும்.அப்படிப்பட்ட பண்டிகை ரிலீஸ் கொண்டாட்டங்கள் எல்லாம் கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காணாமல் போனது. இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டு முக்கிய நடிகர்களான கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் தீபாவளியையொட்டி வெளியாகின்றன.
பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான கார்த்தி முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதனைத் தொடர்ந்து ’நான் மகான் அல்ல’ , ’பையா’ , ’ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக உருவெடுத்தார்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்ற கவலையிலிருந்த ரசிகர்களுக்கு கார்த்தி படம் வெளியாகிறது என்ற செய்தி சற்று மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம் கார்த்தி எப்போதும் நல்ல படங்களையும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் படங்களை மட்டுமே கொடுப்பார் என்ற நம்பிக்கை தான்.
இந்த ஆண்டு கார்த்திக்கு வெற்றிகரமாக ஆண்டாக அமைந்ததுள்ளது. மூன்று மாத இடைவெளியில் மூன்று படங்கள் வெளியாகின்றன. முதலில் வெளியான வெளியான ’விருமன்’ படம் ஓரளவு வெற்றியை பெற்றது. அடுத்து வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போதுவரை ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து இந்த தீபாவளிக்கு ’சர்தார்’ வெளியாகிறது.
கார்த்திக்கு இதுவரை மூன்று படங்கள் தீபாவளிக்கு வெளியாகியுள்ளன. 2013ஆம் ஆண்டு ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படம் வெளியானது. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை . அஜித்தின் ’ஆரம்பம்’, விஷாலின் ’பாண்டிய நாடு’ ஆகிய படங்கள் அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகின. இதில் ஆரம்பம், பாண்டிய நாடு ஆகிய படங்கள் வெற்றிபெற்றன.
அடுத்து 2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு தனுஷின் ’கொடி’ படத்துடன் தனது ’காஷ்மோரா’வை இறக்கினார் கார்த்தி. படம் காமெடியாக இருந்தாலும் ஓடவில்லை. இரண்டாவது முறையும் தோல்வியைச் சந்தித்தார் கார்த்தி.