சென்னை:இயக்குநர் வசந்தபாலன் பதிவிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “சிறிய பட்ஜெட் படங்கள் பற்றி நடிகர் விஷால் கூறிய கருத்துகள் பொதுவெளியில் விவாதங்களை உருவாக்குவதற்கு பதிலாக பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளன என்பது எனக்கு வருத்தம் தருகிறது.
கடந்த ஆண்டில் வெளியாகி வெற்றியடைந்த சிறிய பட்ஜெட் படங்கள் லவ் டுடே, டாடா, குட்நைட், போர்தொழில் போன்றவை. இந்த படங்களின் வெற்றியை கணக்கிடும்போது, இந்த திரைப்படங்களை எடுத்த தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், குட்நைட் நிறுவனத்தைத் தவிர என்பதையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
குட்நைட் திரைப்படமும் கதாநாயகன் மணிகண்டனின் முயற்சியால் பட வெளியீட்டுக்கு முன்பாக அந்த படத்தின் டிஜிட்டல் சேட்டிலைட் உரிமைகளை ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கிவிட்ட காரணத்தினாலே படம் வெளியானது. திரையரங்கிலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும் பெற்றது. மற்ற சிறு பட தயாரிப்பாளர்கள் திரைத்துறைக்கு புதியவர்களாக இருக்க கூடும்.
அல்லது பல காலம் திரைத்துறையில் இருக்கும் சிறு பட தயாரிப்பாளர்கள் செல்வாக்கு இல்லாதவர்களாக, அதிகாரம் இல்லாதவர்களாக இருக்கக் கூடும்.
அதனால், அந்த சிறு படங்களின் டிஜிட்டல் சேட்டிலைட் உரிமையை விற்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. பெரிய நிறுவனங்கள் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கையில், அவர்கள் தயாரிப்பில் உள்ள பல பெரிய நடிகர்களின் படங்களை கருத்தில் கொண்டு அந்த பெரிய படங்களுடன் சேர்ந்து, இந்த சிறிய படங்களின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையையும் விற்று விட இயலும்.
தியேட்டர் வெளியீட்டையும் பெரிய விநியோகிக்கும் கம்பெனி வசம் வழங்கி, 3 வாரங்கள் அந்த படங்கள் குறுக்கீடு இன்றி தியேட்டர்களில் நீட்டிக்க செய்ய இயலும்.
இது சிறு தயாரிப்பாளர்களால் அல்லது பிரபலமில்லாத அல்லது அதிகாரமில்லாத தயாரிப்பாளர்களால் செய்ய இயலாது. பொதுவாக, சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் என்பது புதுமுகங்கள் அல்லது ஆரம்பகட்ட கதாநாயகர்களால் எடுக்கப்படுவது. அவர்களுக்கென தனி பார்வையாளர்கள் கிடையாது. ஆகவே, இசை வெளியீடு துவங்கி பட வெளியீட்டுக்கு வரை குறைந்தது 1.25 கோடி செலவழித்தால்தான் இப்படி ஒரு படம் வெளியாகி உள்ளது என்பது பார்வையாளருக்குச் சென்று சேரும்.
இந்த படங்கள் பொதுவாக பத்திரிகை விமர்சனம், படம் பார்த்து வெளிவந்த பார்வையாளர்கள் படம் நல்லாயிருக்கிறது என்று சொல்கிற கருத்துகளின் வாயிலாக காற்றில் செய்தி பரவி, பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வர துவங்கும்போது அந்த திரைப்படங்கள் திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். தமிழகத்தில் நல்ல படங்கள், தரமான சின்ன படங்கள், வெற்றிப் படங்கள் என்று நினைக்கிற அனைத்து திரைப்படங்களும் மவுத் டாக் மூலமாக பிக்கப் ஆகி, பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களே.