தமிழ்நாடு

tamil nadu

நிச்சயமாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம் - 'எண்ணித்துணிக’ குறித்து இயக்குநர் வசந்த்

By

Published : Aug 10, 2022, 8:14 PM IST

"அனைவரும் நிச்சயமாக 'எண்ணித்துணிக' படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும். நல்ல பொழுதுபோக்காகவும், சீட் நுனியில் அமர்ந்துகொண்டு பார்க்கும் அளவிற்கு நிச்சயம் பெரும் அனுபவத்தை இத்திரைப்படம் உங்களுக்கு கொடுக்கும்” என இயக்குநர் வசந்த் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம்- ’எண்ணித்துணிக’ படம் குறித்து இயக்குநர் வசந்த்
நிச்சயமாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம்- ’எண்ணித்துணிக’ படம் குறித்து இயக்குநர் வசந்த்

இயக்குநர் வசந்தின் 'சத்தம் போடாதே', 'மூன்று பேர் மூன்று காதல்' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எஸ்.கே. வெற்றிச்செல்வன் இயக்கிய ’எண்ணித்துணிக’ திரைப்படம் கடந்த ஆக. 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகர்கள் ஜெய், அதுல்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் கொள்ளையடிக்கப்படுவதால் கதாநாயகன் ஜெய் எப்படி பாதிக்கப்படுகிறார், அதிலிருந்து மீண்டு எதிரிகளை எப்படி பழிவாங்குகிறார் என்பதே படத்தின் ஒன்லைனர். பெரும்பாலான த்ரில்லர் படங்கள் முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் சுணங்கி விடுகின்றன.

ஆனால், இப்படத்தில் அப்படியில்லாமல் முதல் பாதியை விட, இரண்டாம் பாதி கூடுதல் விறுவிறுப்பை அளித்து, ரசிக்கத்தக்கும் வகையில் இயக்குநர் வெற்றிச்செல்வன் திரைக்கதை அமைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 'எண்ணித்துணிக' திரைப்படம் குறித்து இன்று (ஆக. 10) பேசிய இயக்குநர் வசந்த், “என்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெற்றிசெல்வன் எடுத்த படம் ஹிட்டாகியுள்ளது. வெற்றி, படத்தின் திரைக்கதையை நன்றாக வடிவமைத்திருக்கிறார். ஒரு நல்ல த்ரில்லர் படமாக வெளியாகியுள்ள இப்படம், நடிகர் ஜெய்-க்கு பெரிய கம்பேக்காக அமைந்துள்ளது.

இப்படத்தில் பணியாற்றிய எடிட்டர் சாபு ஜோசப், ஒளிப்பதிவாளர் ஜே.பி. தினேஷ்குமார், இசையமைப்பளர் சாம் சி.எஸ் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். படத்தின் பின்னனி இசை இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இயக்குநர் வெற்றியின் இந்த வெற்றி, மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது படத்தின் மூலம் எனக்கு பெருமை கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

அனைவரும் நிச்சயம் இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும். நல்ல பொழுதுபோக்காகவும், சீட் நுனியில் அமர்ந்துகொண்டு பார்க்கும் அளவிற்கு நிச்சயம் பெரும் அனுபவத்தை இத்திரைப்படம் உங்களுக்கு கொடுக்கும்”, என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:90’s கிட்ஸ்களின் கனவு நாயகிகளின் ரீயூனியன்!

ABOUT THE AUTHOR

...view details