சென்னை: தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் தங்கர் பச்சான். இவரது இயக்கத்தில் தற்பொது 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம் மேனன், தங்கர் பச்சான், ஆர்.வி.உதயகுமார், அதிதி பாலன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ”கிழக்கே போகும் ரயில் படத்தின்போது கேட்ட குரல் இப்போது வரை அப்படியே இருக்கிறது. கலைஞனுக்கு வயதில்லை. இப்போதும் அவரால் படம் இயக்க முடியும். விரைவில் படம் இயக்குவார்" என கூறினார்.
மேலும் அவரது சாதனையை இந்திய சினிமாவில் எந்த இயக்குநராலும் பண்ண முடியவில்லை என்றும், அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியவர் என்றும், தங்கர் பச்சான் எனது தம்பி போன்றவர் என்றும், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் என்றும் கூறினார். குறிப்பாக இப்படம் ஒரு உணர்வுப்பூர்வமான படம் என்பதையும், தங்கர் பச்சானுக்கு தான் செல்லுலாய்டு சிற்பி என்ற பட்டத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கௌதம் மேனன் பேசும் போது, "இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் பாரதிராஜா மற்றும் தங்கர் பச்சான். இவரது படங்கள் எப்படி இருக்கும் என்று தெரியும். பாரதிராஜாவின் மகனாக நடிக்க சொன்னார்கள். எப்படி இருக்கும் என்று நினைத்து நடித்தேன். என்னை அடிக்க பாரதிராஜா தயங்கினார். எனக்கு இப்படத்தில் நடிக்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன்" என்று நன்றி தெரிவித்து தன் உரையை முடித்து கொண்டார்.
அவரை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, ஆடியோ வெளியீட்டு விழா என்பது ஒரு சடங்கு என்றும். தனக்கு இதில் உடன்பாடு கிடையாது என்றும் தெரிவித்தார். மேலும், "தங்கர் பச்சான் ஒரு சிறந்த எழுத்தாளர். இப்படத்தில் என்னை ரொம்ப மோல்ட் செய்தார். நான் பெண்களின் கண்களை மிகவும் ரசிப்பவன். அதற்கு பிறகு கௌதம் மேனன் கண்களை ரசித்தேன். அவரது கண்கள் பேசும்" என்று கூறினார்.