இயக்குனர் ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஐஸ்வர்யா. இளையவர் அதிதி, விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இவர்கள் இருவருமே மருத்துவர்கள். இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
தாமோதரன், தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இதற்கிடையே ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தப்பட்டது.
பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த அரங்கை அமைத்திருந்தார். கரோனா உச்சத்தில் இருந்த சமயம் என்பதால் அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். கரோனா குறைந்து ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதும் சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என அப்போதே கூறப்பட்டது. இதையடுத்து நாளை ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமண வரவேற்பு நடைபெறுவதாகக் கடந்த மாதமே திரையுலகினரை சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்தனர் ஷங்கரும், அவரது மனைவியும்.