இயக்குநர் பார்த்திபன் இயக்கி அவரே நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படம் கடந்த 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து பார்த்திபன் மற்றும் அவரது குழுவினர் திரையரங்குகளுக்கு நேரில் சென்று பார்வையாளர்களை சந்தித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 17) கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கேஜி திரையரங்கிற்கு வருகை புரிந்த பார்த்திபன் மற்றும் நடிகை பிரிகிதா பார்வையாளர்களை சந்தித்து திரைப்படம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், திரைப்படம் எடுக்கப்படும் பொழுது இருந்த சவால்களையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன், ”’இரவின் நிழல்’ படம் ஒரு புது முயற்சி. இது போன்ற படத்தை எடுப்பதற்கு முயற்சி செய்வதே கடினம். மக்களுக்கு என்ன பிடிக்குமோ இதற்கு முன்பு என்ன பிடித்ததோ அதை மட்டுமே வைத்து படம் எடுத்து பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதை விட புதிதாக மக்களின் ரசனைக்கு தகுந்தார் போல் புது முயற்சி மேற்கொள்ளலாம் என எடுக்கப்பட்ட படம் இது.
இப்படத்தின் கதை என்பது ஒரு சராசரி கதை அல்ல. பத்திரிகை செய்தி படிக்கும் பொழுது அதிர்ச்சிக்குரிய செய்திகளை எல்லாம் இதில் படமாக்கி உள்ளேன். நான் ஒரு பத்திரிகையாளராகவோ , ஊடகவியலாளராகவோ இருந்திருந்தால் இப்படத்தின் பிளஸ் பாயிண்ட்ஸ் மட்டுமே எடுத்துக் கூறியிருப்பேன்.
இப்படம் மக்கள் பலருக்கும் தெரிய வேண்டும். கமர்சியலாக இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இப்படத்திற்கு இளைஞர்கள் வரவேற்பு அதிகம் உள்ளது. அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். பத்திரிகையாளர்களின் விமர்சனத்தினால் தான் இவ்வளவு கூட்டம் வந்துள்ளது. இதுபோன்ற சினிமாவிற்கு ஆதரவு தர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
மிகப்பெரிய அளவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகப்பெரிய வெற்றியை அடைந்தால் தான் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற படங்களை எடுப்பதற்கு முன்வருவார்கள். இது போன்ற படம் எடுத்து சரியாக ஓடவில்லை என்றால் புது முயற்சியை எடுப்பவர்கள் தோற்றுவிடுவார்கள்.