சென்னை: "டைனோசர்ஸ்" (dienosirs) என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் மிஷ்கின், ரமணா, நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சம்பந்தம், இயக்குநர் எம்.ஆர்.மாதவன், கதாநாயகன் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்றனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவுக்கு கம் பேக் கொடுத்த திருமலை படத்தின் இயக்குநர் ரமணா இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய ரமணா தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டு கை விரல்களால் தொண்டையை அழுத்தி பேச முடியாமல் ஹஸ்கி வாய்ஸில் பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது.
மேடையில் பேசிய இயக்குநர் ரமணா, "தொண்டை இல்லாமல் பேசுவதாகவும், கையை எடுத்தால் பேச முடியாது என்றும் கூறியது" அனைவரையும் வருத்தம் அடைய செய்தது.
நடிகர் விஜயகுமார் பேசுகையில், "படத்திற்கு கதை தான் நாயகன். இந்த கதைக்கு நாயகனாக இருக்கும் உதய் கார்த்திக் எங்கள் வீட்டு பிள்ளை. கதையை மக்களுக்கு சொல்லும் விதத்தை வைத்துதான் படம் ஓடுமே தவிர. படங்களில் நடிக்கும் கதாநாயகர்களை வைத்து ஒரு சில படங்கள் ஓடலாம். 4 வாரம் ஹவுஸ்புல் ஆகலாம். ஏன் 50 கோடி, 100 கோடி வசூல் பண்ணியது என சொல்லலாம். ஆனால், நல்ல படங்கள் மக்களுக்கு பிடித்து இருந்தால் நிச்சயமாக ஓடும்" என தெரிவித்தார்.
நடிகர் அருண் விஜய் கூறியது, "நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். அந்த வகையில் இந்த படத்திற்கும் ஆதரவு கிடைக்கும்" என்று படக்குழுவை பாராட்டி பேசினார்.
படத்தின் இயக்குநர் எம்.ஆர்.மாதவன் பேசியது, "குழந்தைகளுக்கு அப்பா தான் ஹிரோ. ஆனால் முதல் பட இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர் தான் ஹீரோ என்று தயாரிப்பாளர் பற்றி நெகிழ்ச்சியாக கண் கலங்கி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், சிலர் 10 பேரின் கதையைக் கேட்டு தூங்கிவிட்டேன் என்று சொன்னாரே அது மாதிரி நினைத்துக்கொள்ள வேண்டாம். கடந்த 6 வருடங்களில் 143 தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி உள்ளேன். படம் இயக்கி கூட நான் அவ்வளவு சம்பாதித்தது இல்லை. ஆனால் இது வரை 15 அட்வான்ஸ் வாங்கி உள்ளேன். இந்த படத்திற்கு கூட 7 லட்சம் தான் அட்வான்ஸ் வாங்கினேன். அதே போல் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணிடம் அக்ரிமென்ட் வரைக்கூட போனது. ஆனால் சில காரணங்களால் அது விலகி போனது" என தெரிவித்தார்.
தயாரிப்பாளர் போனி கபூர் கூறியது, "நான் இந்த திரைப்படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன். படத்தின் நாயகன் உதய் கார்த்திக் என்னுடைய மருமகன் (nephew). இவர் நன்றாக நடிக்கிறார், நன்றாக காமெடி செய்கிறார். ரொமாண்டிக் சீனிலும் கூட நன்றாக நடித்துள்ளார். அது மட்டும் அல்ல கார்த்திக் ஒரு good kisser. படத்தில் கதாநாயகியை தவிர ஒரு வயதான பெண்மணிக்கும் நடிகர் கார்த்திக் முத்தம் கொடுத்தார். அந்த வயதான பெண்ணும் அவரது முத்தத்தை ரசித்தார்" என்று ஹியூமராக போனி கபூர் பேச அரங்கமே அதிர சிரிப்பலை ஏற்பட்டது.