சென்னை:இயக்குநர் மாரி செல்வராஜ் “பரியேறும் பெருமாள்” படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது முதல் தடத்தை பதித்தார். பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி வெளிவந்த அப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் பரவலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதன் மூலம் மாரி செல்வராஜ் பெற்ற வெற்றி அடுத்தகட்ட நகர்வாக தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பை வழங்கியது. இப்படியாக மாரி செல்வராஜால் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்புதான் “கர்ணன்”. அப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. தன் ஒவ்வொரு படங்களின் மூலமும் பட்டியலினத்வர்களின் வாழ்க்கையையும் வலியையும் காட்டமாக இவர் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ (Maamannan) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படமே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமன்றி இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சிறப்பம்சமாக, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ‘வடிவேலு’ நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.